×

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச்சட்டம் தமிழகத்தில் அமல்படுத்த புதிய குழு

* சிக்கல்களை ஆய்வு செய்ய நடவடிக்கை
* அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல்

சென்னை: மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தும் வகையில், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையினை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு மாநிலத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் அமலுக்கு வரும் என்று போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் கடந்த 1939ம் ஆண்டு மோட்டார் வாகனச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு 1988ம் ஆண்டில் முதன்முறையாக மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 1974ல் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டன.

அதன்பிறகு மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா 2017ம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, நிலைக்குழு அளித்த சில பரிந்துரைகளுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவை தேர்வுக்கழு, இது தொடர்பாக எவ்விதமான பரிந்துரையும் செய்யவில்லை.
இதனால் அப்போது மத்திய அரசால் சம்மந்தப்பட்ட மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து மீண்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில், பல்வேறு பிரிவுகளில் ஏராளமான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் ரூ.10,000 விதிக்கப்படும். இதுவே இரண்டாவது முறையாக இருந்தால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 15,000 அபராதம் விதிக்கப்படும். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். இதன்மூலம் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது தவிர்க்கப்படும். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக குறைந்தபட்ச கல்வித்தகுதி நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓட்டுனர் பணி செய்வோர் பயனடைவார்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.500 முதல் ரூ.5,000 வரை விதிக்கப்படும்.

அதிகவேகத்தில் வாகனத்தை ஓட்டும் பட்சத்தில், டூ வீலராக இருந்தால் ரூ.1,000 அபராதம், இலகுரக வாகனமாக இருந்தால் ரூ.2,000, கனரக வாகனமாக இருந்தால் ரூ.4,000 அபராதம் செலுத்த வேண்டும். ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டும் பட்சத்தில் முதன்முறை பிடிபட்டால், 6 மாதம் முதல் 1 ஆண்டு சிறை, அபராதம் ரூ.5,000 விதிக்கப்படும். இதுவே இரண்டாவது முறை சிக்கும்பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். மோட்டர் ரேசில் ஈடுபட்டால் முதன்முறையாக இருக்கும் பட்சத்தில், ஒருமாத சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.

இரண்டாவது முறை சிக்கினால் ஒருமாதம் சிறை அல்லது ரூ.10,000 விதிக்கப்படும். இதுபோல் ஒவ்வொரு பிரிவிலும் ஏராளமான சட்டதிருந்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த சட்டம் கடந்த செப்டம்பர்-1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் செயல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த பிரத்யேகமாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழு ஆய்வு செய்து தனது அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து போக்குவரத்து துறை கமிஷனர் சமயமூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் இன்னும் புதிய மோட்டார் வாகனச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதேபோல் மேலும் ஒருசில இடங்களில் அமலுக்கு வரவில்லை. எனவே தமிழகத்தில் இத்திட்டத்தை அமல்படுத்தும் வகையில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதை ஆராய்வதற்காக மத்திய அரசு பிரத்யேகமாக குழு அமைத்துள்ளது.
இதேபோல் தமிழக அரசு சார்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. தனது அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யும். அதை மத்திய அரசு ஆய்வு செய்யும். அப்போது மாறுதல்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் செய்யப்படும்.
பிறகு சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக உத்தரவிடப்படும். இதேபோல் தமிழக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவும் தனது அறிக்கையை விரைவில் சமர்பிக்கும். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக  குறைந்தபட்ச கல்வித்தகுதி நீக்கப்பட்டுள்ளது.
* லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.500 முதல் ரூ.5,000 வரை.
* அதிகவேகத்தில் வாகனத்தை ஓட்டும் பட்சத்தில், டூ வீலராக இருந்தால் ரூ.1,000 அபராதம், இலகுரக வாகனமாக இருந்தால் ரூ.2,000, கனரக வாகனமாக இருந்தால் ரூ.4,000 அபராதம் செலுத்த வேண்டும்.
* ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டும் பட்சத்தில் முதன்முறை பிடிபட்டால், 6 மாதம் முதல் 1 ஆண்டு சிறை, அபராதம் ரூ.5,000 விதிக்கப்படும்.
* இதுவே  2வது முறை சிக்கும்பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். மோட்டர் ரேசில் ஈடுபட்டால் முதன்முறையாக  இருக்கும் பட்சத்தில், ஒருமாத சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.



Tags : Tamil Nadu , Central Government, New Motor Vehicle Act, Tamil Nadu, Implementation, New Group
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...