×

கடந்த 3 ஆண்டுகளாக புதிய பயனாளிகள் சேர்க்காத அவலம் மீனவர்களுக்கான நிவாரண திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதில் குளறுபடி

* விழிப்புணர்வு ஏற்படுத்தாத மீன்வளத்துறை
* பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: மீனவர்களுக்கான நிவாரண திட்டத்தில் நிதியுதவி பெறுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பதால் பயனாளிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். தமிழகத்தில் மீனவர்களுக்காக தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம், மீன்பிடிப்பு குறைந்த கால சிறப்பு நிவாரண திட்டம், கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்களுக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிவாரண உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவந்தது.

இந்த விண்ணப்பத்தை ஒவ்வொரு முறையும் நிரப்பி தர வேண்டிய நிலை இருந்தது. தற்போது இதற்கு பதிலாக மீனவர்கள் ஒரு முறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக, மீனவர்கள் இ-சேவை மையம் மூலம் அடையாள ஆவணங்களை காட்டி பதிவு செய்ய வேண்டும். அதன்படி, ஒவ்வொரு திட்டத்துக்கும் விண்ணப்பிக்கும் மீனவர்கள் அந்தந்த திட்டத்துக்கு தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என்று மீன்வளத்துறை கூறியுள்ளது.

ஆனால், ஆனால், இ-சேவை மையத்தில் மூலம் பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. குறிப்பாக, பல நேரங்களில் இ-சேவை மையங்களில் சர்வர் மெதுவாக வேலை செய்வதால் குறித்த காலத்திற்குள் பதிவு செய்ய முடியவில்லை. இதனால், நாள் முழுவதும் மீனவர்கள் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஒவ்வொரு திட்டத்துக்கு தனித்தனியாக பதிய வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் பெற பதிவு செய்தவர்கள் மற்ற திட்டங்களுக்கு பதிவு செய்யவில்லை. இதனால், மீன்பிடிப்பு குறைந்த கால சிறப்பு நிவாரண திட்டம், தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம், கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண உதவி தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
மீன்பிடிப்பு குறைந்த காலத்தில் 13 கடலோர மாவட்ட மீனவ குடும்பங்களின் துயரினை போக்கும் விதமாக ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்துக்கு ஒரு பயனாளிக்கு ரூ.4,500 வீதம் வழங்கப்படுகிறது. தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 58 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.4,500 வழங்கப்படுகிறது.

இதில், மீன்பிடிப்பு குறைந்த கால நிவாரண உதவி தொகை பெறுவதற்கான ஆன்லைன் பதிவு செய்யும் பணி முடிவடைந்து விட்டது. இதில் பலர் பதிவு செய்யவில்லை. அதே போன்று தேசிய மீனவர் சேமிப்பு மற்று நிவாரண திட்டம், மகளிர் சேமிப்பு திட்டங்களுக்கு பதிவு செய்யவில்லை. இதனால், அவர்களுக்கும் நிவாரண நிதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தனியாக ரேஷன் கார்டு பெற்றும் புதிதாக நிவாரண உதவிகளை பெற விண்ணப்பித்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை.

அதே போன்று கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தில் 18 வயது நிறைந்த தகுதியுள்ள ஆயிரக்கணக்கான புதிய மீனவ இளைஞர்களுக்கும் சேர்க்கப்படவில்லை. இதனால், அவர்களுக்கு நிவாரண தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மீன்பிடி குறைந்த கால நிவாரண உதவி தொகையாக 1.62.101 பேருக்கும், கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்துக்கு 1,98,894, சேதிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தில் 2,08,115 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்கள் சேர்க்கப்பட்டததால் அவர்களால் பயன்பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : fishermen ,Fishermen's Relief Scheme , Last 3 Years, New Beneficiaries, Relief and Fishermen Relief Scheme
× RELATED இலங்கை சிறையிலிருந்து...