×

தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உபரி மின்கட்டண நிதியை செலவிட வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கலசபாக்கம்: தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மின்கட்டண உபரி நிதியினை செலவிட அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவி காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அக்டோபர் மாதம் 24ம் தேதிக்கு பின்னர் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தை தனி அலுவலர்கள் கவனித்து வருகிறார்கள்.  

பல்வேறு கிராமங்களில் குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட பொதுமக்கள் தனி அலுவலர்களிடம் முறையிட்டு வருகின்றனர். தேவையான அளவுக்கு ஊராட்சிகளில் நிதி இல்லாததால் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு தனி அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பிடிஓ மற்றும் துணை பிடிஓக்கள், மண்டல பிடிஓக்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காண முடியவில்லை.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, விலைவாசி உயர்வு காரணமாக, பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளதாலும், சொற்ப நிதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தனி அலுவலர்கள் தவித்து வருகின்றனர். மின்கட்டணம் செலுத்துவதற்கென்று கிராம ஊராட்சிகளில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, மின்கட்டணம் செலுத்திய தொகை போக, மின்கட்டண நிதியில் உபரியாக ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஊராட்சிகளில் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நிதி இல்லாத பட்சத்தில் மின்கட்டண நிதியிலிருந்து அடிப்படை தேவைகள் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மின்கட்டண இருப்பு தொகையில் இருந்து செலவு செய்து வந்தனர். தற்போது, ஒரு சில ஊராட்சிகளில் ஊராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூட ஊதியம் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒட்டு மொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. போதிய அளவிற்கு நிதி இல்லாததால், ஒட்டு மொத்த துப்புரவு பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஜல்சத்தி அபியான் திட்டத்தின் கீழ் தனி நபர் இல்லங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் எனவும், மழை நீரை சேமித்திடவும், தண்ணீரை வீணாக்காமல் இருக்க பானைகளில் துளையிட்டு தண்ணீர் பாய்ச்ச தேவையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு பானைகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் செய்திடவும், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவும் போதிய நிதியில்லை. எனவே ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட உபரியாக உள்ள ஊராட்சிகளின் மின்கட்டண நிதியினை செலவிட அனுமதிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, 12,524 Rural Panchayats, Basic Needs, Surplus Power Fund, Public Expectation
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...