டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடைகோரி வழக்கு மத்திய அரசு பதில் தர நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த வக்கீல் எ.மார்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 14.47 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பசுமை சூழ்ந்த இந்த பகுதிகளில் வாழும் 65 சதவீத மக்கள் விவசாயத்தையும், அதை சார்ந்த தொழில்களையும் நம்பியே உள்ளனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் பணிக்காக மத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் பல மாவட்டங்களில் விவசாய நிலங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன. சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் தோண்டப்படும் இந்த கிணறுகளால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் விவசாய செய்வதற்கான சூழ்நிலையும் முற்றிலும் மாறிவிட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளக்குடி என்ற கிராமத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஏராளமான மீத்தேன் கிணறுகளை தோண்டியதால் கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் நிலம் காய்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு மாறியுள்ளது. அந்த கிராம மக்கள் குடிதண்ணீருக்கே திணறி வருகிறார்கள். இதேபோல், நீடாமங்கலம், தேவர்கண்டநல்லூர், வையகளத்தூர் போன்ற 100 கிராமங்களில் எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டால் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது.

இந்த திட்டங்களை நிறுத்தக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டங்களையும் நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் அதன் ஆற்று படுகைகளில் மீத்தேன் வாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.அய்யாத்துரை ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, மத்திய விவசாயதுறை மற்றும் தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories:

>