×

தமிழகத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் யூரியா தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சண்முகம் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பருவமழை இந்த ஆண்டு சிறப்பாக இருக்குமென்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தெரிவித்து வந்தது, சில பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் பெரும் பகுதியான இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சம்பா சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் யூரியா உரம் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு இந்த ஆண்டு எவ்வளவு உரம் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு இறக்குமதி செய்து இருப்பு வைக்காமல் அலட்சியமாக இருந்ததே இத்தகையை நெருக்கடிக்கும், பற்றாக்குறைக்கும் காரணமாகும். எனவே, தமிழகம் முழுவதும் தேவையான யூரியா விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடைகளில் உரங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் அவற்றை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Tamil Nadu Farmers Association , Tamilnadu, Urea Fertilizer, Duttapadu, Government Action, Tamil Nadu Farmers Association, Request
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...