×

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் உடனடியாக அனுபவ சான்று வழங்க வேண்டும்: கல்லூரிக் கல்வி இயக்குநர் அதிரடி

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கு, பணி அனுபவ சான்றுகள் வழங்க மறுக்கும் பல்கலைக்கழகங்கள் உடனடியாக சான்றுகளை வழங்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கல்லூரிக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. உதவிப் பேராசிரியர் பணிக்கு சேர விண்ணப்பிக்க தகுதியுள்ள ஆசிரியர்கள் பணி அனுபவ சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்பேரில் ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளின் நிர்வாகங்களில் பணி அனுபவ சான்று கேட்டுள்ளனர். ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் பணி அனுபவ சான்று வழங்குவதில் தாமதம் செய்வதாக கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு பல புகார்கள் வந்தன. புகார்களின்பேரில் கல்லூரிக் கல்வி இயக்குநர் சார்பில் அனைத்து தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளுக்கு அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் பணி அனுபவ சான்றுகளை வழங்க மறுக்கின்றன.

இது தற்போது பெரும் சர்ச்சையை  உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இரண்டாம் முறையாக கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேசன், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்கள், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தகுதியுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வசதியாக பணி அனுபவ சான்று கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் கல்லூரிக் கல்வி இயக்குநர்  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பல்வேறு புகார் மனுக்கள் நேரடியாகவும், முதல்வர் தனிப் பிரிவு மூலமாகவும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் பெறப்படுகிறது. தனியார் பல்கலைக் கழகங்கள், பல்கலைக்கழக இணைவு பெற்ற உறுப்புக் கல்லூரிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அரசு வகுத்துள்ள ஒழுங்காற்று  சட்ட விதிமுறைகளுக்கு  கட்டுப்பட்டு, பணி அனுபவ சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்கு பிறகும் பணி அனுபவ சான்றுகள் வழங்க மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.


Tags : Assistant Professorship ,Universities ,College Education , Assistant Professor, Applicant, Universities, Experience, Director of College Education, Action
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!