×

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரிப்பு: மொத்த, சில்லரை வியாபாரிகள் மகிழ்ச்சி

ஈரோடு: ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு மொத்த, சில்லரை விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்னிந்தியாவிலேயே புகழ்பெற்ற ஜவுளி சந்தை ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு துவங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும்.   இதில், ஈரோடு கனி மார்க்கெட் சந்தையில் மட்டும் தினசரி, வாரந்திர கடைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரிகள் ஜவுளி ரகங்களை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில், கனி மார்க்கெட் சந்தை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

இதனால், கனி மார்க்கெட் சந்தையில் வாரச்சந்தை கடைகள் இடிக்கப்பட்டு, வியாபாரிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் பெரும்பாலானோர் தனியார் சந்தைகளுக்கு சென்று விட்டனர். இங்கு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சேலை, லுங்கி, துண்டு, சுடிதார், உள்ளாடை, ஆயத்த ஆடை, குழந்தைகளுக்கான ஆடை, மேசை விரிப்பு, படுக்கை விரிப்பு, தலையணை உறை, கால்மிதியடி மெட், பெட்ஷிட், பனியன் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர சூரத், புனே, மும்பை, அகமதாபாத் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பேன்சி ஜவுளி ரகங்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு ஜவுளி சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வாரந்தோறும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

பண்டிகை காலங்களில் ஜவுளி சந்தையில் விற்பனை களைகட்டும். ஆனால், கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, அந்த ஆண்டு தீபாவளி விற்பனையும், 2018ம் ஆண்டு தீபாவளி விற்பனையும் பெருமளவு பாதித்தது. இதனால், 80 சதவீதம் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இதைத்தொடர்ந்து ஜிஎஸ்டியில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் ஜவுளி சந்தை வியாபாரிகள் 85 சதவீதம் பேர் ஜிஎஸ்டிக்கு மாறி தங்களது விற்பனையை துவக்கினர்.

இந்நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகை விற்பனை ஜவுளி சந்தையில் கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்திலேயே துவங்கியதால், தமிழகம் மற்றும் வெளிமாநில வியாபாரிகளும் அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்தனர். இதேபோல், கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய நாட்களில் நடந்த சந்தையில் மொத்த விற்பனையைவிட, சில்லரை விற்பனையில் வாங்க பொதுமக்கள் அதிகம் குவிந்தனர். விற்பனையும் சூடுபிடித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளை காட்டிலும் நடப்பாண்டு தீபாவளி விற்பனை 85 சதவீதம் நடந்தது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் ஜவுளி சந்தை வியாபாரிகள் எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து உள்ளனர். கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம், சென்னையில் புயல் பாதிப்பு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளானோம். இதுதவிர, ஜிஎஸ்டி பிரச்னை முதலில் பாதித்தது. ஜவுளி சந்தை வியாபாரிகளான எங்களைத்தான். அந்த சமயத்தில் நூல் விலை உயர்வு, ஜவுளி ரகங்கள் விலை உயர்வு என வியாபாரிகள் ஜவுளி தொழிலை செய்யலாமா? வேண்டாமா? என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலை படிப்படியாக மாறி, ஜிஎஸ்டி பிரச்னையும் வியாபாரிகளுக்கு புரிந்ததால் மீண்டும் ஜவுளி தொழில் புத்துணர்ச்சி பெற துவங்கியது.

இதனால், நடப்பாண்டு தீபாவளி பண்டிகை மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் ஒரே அளவுக்கு ஆனதால் ஈரோடு ஜவுளி சந்தையில் 85 சதவீதம் விற்பனையானது. கனி மார்க்கெட் சந்தையை பொறுத்தவரை ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டுமான பணிகளுக்காக வியாபாரிகள் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்றதால் அவர்களது வர்த்தகம் மட்டும் பெருமளவு பாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : retailers , Erode, Textile Market, Sales, 2 Year, Increase, Wholesale, Retailers, Happiness
× RELATED பந்தலூர் பகுதியில் திடீர் மின் துண்டிப்பால் பாதிப்பு