×

சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்கு 1 கி.மீ போதும் கேரளாவின் முடிவை பின்பற்றுமா தமிழகம்? உச்சநீதிமன்ற உத்தரவை மறைக்கும் அதிகாரிகள்

நாகர்கோவில்: குடியிருப்பு பகுதிகள் வனப்பகுதிகளாக மாறுவதை தடுக்க சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்கு 1 கி.மீ தூரம் போதும் என்று கேரளா முடிவு செய்துள்ளதை தமிழகமும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில்  வன உயிரின பாதுகாப்பு மண்டலம் 40 ஆயிரத்து 293 ஹெக்டேர் பரப்புடன் 2007ம் ஆண்டு  அமையப்பெற்றது. வன உயிரின பாதுகாப்பு மண்டலத்தில் வன விலங்குகள் நடமாட்டத்திற்கு ஏதுவாக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க கடந்த 2017ம் ஆண்டு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஐகோர்ட் உத்தரவுப்படி 10 கி.மீ தூரம் வரை சூழலியல் மண்டலம் அமைப்பதை கைவிட்டு 3 கி.மீ தூரத்திற்கு அமைப்பது தொடர்பாக வரைபடம் தயாரித்து குமரி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் ஆறுகாணி கால்வாய் தொடங்கி நெல்லை மாவட்ட எல்லையான மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ சார்ந்த பகுதிகள் வரை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போதைய வனப்பகுதிகளை தாண்டி சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அதிகபட்சம் 3 கி.மீ வரை அமைகிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ளதில் 50 சதவீத நிலங்கள் இதனால் பாதிப்படையும், அதனால் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகள் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. இதற்கிடையே இதே போன்ற பிரச்னையில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க 1 கி.மீ தூரம் போதும் என்ற முடிவுக்கு கேரள அரசு முன் வந்துள்ளது.

அமைச்சரவையை கூட்டி இது தொடர்பாக முடிவு எடுத்துள்ளது. இதற்காக வரைவு அறிக்கையில் திருத்தம், மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 1 கி.மீ தூரத்திற்கு அப்பால் கல்குவாரிகள், செங்கல் சூளைகள், மர தொழிற்சாலைகள் செயல்படுவது தொடர்பான சிக்கல்கள் நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் துறை சார்ந்த அமைச்சருக்கு இப்படி ஒரு பிரச்னை அவரது கவனத்திற்கே வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.   

சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தற்போதைய வனப்பகுதியில் இருந்து மேலும் 10 கி.மீ தூரம் புதியதாக தேர்வு செய்யப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்பு ஆகும். இது தொடர்பான வழக்கில் குறைந்தபட்சம் 1 கி.மீ தூரமேனும் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுரை வழங்கியிருந்தது.  மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் அதனையே செயல்படுத்தின. அதனை மாதிரியாக கொண்டு கேரளாவும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் 1 கி.மீ தூரத்திற்கு அமைக்க முடிவு செய்துள்ளது.

ஆனால் குமரி மாவட்டத்தில் அமைச்சகம் தெரிவித்த 10 கி.மீ க்கு பதில் 3 கி.மீ தூரம் அமைக்க வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்து வருகின்றனர். 1 கி.மீ தூரம் என்பதை மறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அவசர அவசரமாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதற்கு மதுரை ஐகோர்ட் கிளை ‘பாதிக்கப்படுகின்ற கிராமங்கள் தோறும் கருத்துகேட்பு கூட்டம் நடத்திய பின்னர் இது தொடர்பாக முடிவுக்கு வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குமரி மாவட்ட தோட்ட தொழிலாளர் யூனியன் பொதுசெயலாளர் வல்சகுமார் கூறுகையில், ‘மத்திய அரசு வனம் சுற்றுச்சூழல் துறை உடனடியாக வன எல்லையில் இருந்து வெளியே 10 கிலோமீட்டர் வரை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக அறிவிக்க மாநிலங்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துக் கொண்டது. மாநில அரசுகள் மத்திய அரசு அறிவித்த காலக்கெடுவிற்குள் இது தொடர்பாக விவாதித்து  கருத்தை தெரிவித்திருக்க வேண்டும். மத்திய அரசிடம் அறிவிக்காத மாநிலங்கள் 10 கிலோ மீட்டர் வரை உச்சநீதிமன்றம் கூறியதின் அடிப்படையில் வனச்சூழல் பகுதியாக மாற்ற வேண்டும்.

தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசு சுற்றறிக்கையை ஏற்காத காரணத்தால் நெருக்கடி முற்றியது. அந்த சுற்றறிக்கையில் 10 கிலோமீட்டர் என்ற வரையறைக்கு பதிலாக குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டர் அளவாவது எல்லைக்கு வெளியே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா இதனை பின்பற்றியுள்ளது. தமிழக அரசிடம் மாவட்ட நிர்வாகம் என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கடுமையான நிர்பந்தம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால் தமிழக அரசு எல்லைப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் மட்டுமே வன சூழியல் மண்டலம் என்று அறிவித்தால் குமரி மாவட்ட மலையோர பகுதியில் உள்ள பெரும்பகுதி மக்கள் பாதுகாக்கப்படுவர்’ என்றார். 10 கிலோமீட்டர் என்ற வரையறைக்கு பதிலாக குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டர் அளவாவது எல்லைக்கு வெளியே இருக்க வேண்டும்.

Tags : Will Kerala ,Supreme Court ,resonance zone , Ecological resonance, buffer zone, 1km, end of Kerala, imitation
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...