×

சென்னையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பட்டம் தூக்கு கயிறாக மாறுகிறதா மாஞ்சா நூல்

* தொடர் உயிர் பலியால் சாலையில் நடக்க பொதுமக்கள் அச்சம்
* கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீசார்

பட்டம் என்றால் வடசென்னை தான் எல்லோருடைய ஞாபகத்துக்கும் வரும். அவர்களை மிஞ்சி யாரும் பட்டம் விடமுடியாது. அந்த அளவிற்கு காற்றின் திசையை அறிந்து பட்டம் விடுவதில் வல்லவர்கள். பட்டம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டாகத்தான் விட்டனர். ஆனால் காலப்போக்கில் வடசென்னைஏரியாவில் பட்டம் விடுவதில் யார் பெரியவர் என்பதில் கடும் போட்டி நிலவியது. இதனால் பக்கத்து ஏரியாவில் விடும் பட்டம் தங்களது ஏரியாவில் பறந்தால் அந்த பட்டத்தை தங்களது பட்டத்தின் மூலமே அறுத்து எறியும் சம்பவங்களும் நடந்து வந்தது. இதற்காகத்தான் பட்டம் விடுவதற்காகவே வடசென்னையில் மஞ்சா நூல் தயாரிக்க அதிகளவில் குடிசை தொழில்கள் உருவானது. பட்டம் விடுவோர் செல்லமாக அதை ‘காத்தாடி’ என்று தான் அழைப்பார்கள்.

வடசென்னையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை தொழிலாக பட்டம் மற்றும் அதற்கான மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்து வந்தனர். கோடை காலம் தொடங்கினால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு மாஞ்சா நூல் மூலம் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பட்டம் விடுவார்கள். காற்றின் வேகம், மற்றும் அருகில் உள்ள பட்டம் அறுத்தால் பட்டத்தின் உரிமையாளருக்கு இன்றும் சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்தது. பட்டம் விடுவதில் ஏற்பட்ட போட்டியால் வடசென்னையில் கொலைகளும் நடந்துள்ளது. அந்த அளவிற்கு வாலிபர்கள் வெறித்தனமாக பட்டம் விட்டு தங்களது ஏரியா கெத்தை பல ஆண்டுகளாக காட்டி வருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு கூட மாஞ்சா நூல் கழுத்து அறுத்து சிலர் இறந்துள்ளனர். பலரது கை விரல்கள் துண்டாகி சிறு காயங்களுடன் உயிர் தப்பியும் உள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் சாலையை கடந்த கோதண்டராமன் என்பவரின் கழுத்தை மாஞ்சா நூல் சிக்கி அறுத்து சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் இந்தார். இந்த சம்பவம் தான் சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து வெளிச்சத்திற்கு வந்த முதல் உயிர் பலி என்று போலீசார் கூறுகின்றனர். அதற்கு முன்பு நடந்தது எல்லாம் வெளிச்சத்துக்கு தெரியாமல் போனது.

2007ம் ஆண்டு வியாசர்பாடியில் விளையாடி கொண்டிருந்த 2வயது குழந்தை கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. வளசரவாக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு திருப்பதியை சேர்ந்த கார் டிரைவர், 2011ம் ஆண்டு மெரினா கடற்கரைக்கு தனது பெற்றோருடன் வந்த 4வயது சிறுமி, 2012ம் ஆண்டு தண்டையார் பேட்டையில் கோபால், அரும்பாக்கத்தில் ராஜ்குமார், மற்றும் மந்தைவெளி ரயில் நிலையம் அருகே ஜெயகாந்தன் ஆகியோர் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இப்படி ஒவ்வொரு ஆண்டும் மாஞ்சா நூல் அறுத்து இறப்போர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு தான் வந்தது. ஆனால் உயிர் பலியை தவிர்க்க நிரந்தர தீர்வு எடுக்க முடியாமல் போலீசார் தவித்து வந்தனர்.

கடந்த 2015ம் ஆண்டு பெரம்பூரில் தந்தையுடன் பைக்கில் சென்ற அஜய்(5) என்ற சிறுவன் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்து துடிதுடித்து உயிரிழந்தான். இந்த சம்பவம்தான் சென்னையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்றம் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

அப்போது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 175 பேரை போலீசார் கைது செய்தனர். மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரித்த தொழில் சாலை கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது. அதேபோல் விற்பனையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டது. மாஞ்சா நூல் பட்ட தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்காணிக்க அப்போது 15 நாட்களுக்கு ஒரு முறை கூடுதல் கமிஷனர்கள் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இணை கமிஷனர்கள் வாரம் ஒருமுறை கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மாஞ்சா நூல் காரணமாக அசம்பாவிதம் நடந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவுகள் எதுவும் தற்போது உள்ள மாநகர போலீசார் யாரும் பின்பற்றப்பட வில்லை. அதற்கு மாற்றாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். இதன் விளைவாகத்தான் கடந்த 2ம் தேதி கொருக்குபேட்டை மேம்பாலத்தில் தந்தை மற்றும் தாயுடன் பைக்கில் வந்த அபிநேஷ் ராவ்(3) என்ற குழந்தை கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி சம்பவ இடத்திலேயே பெற்றோர் முன்னிலையிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது. இதையடுத்து மாஞ்சா நூலில் பட்டம் விட்டதாக ஆர்.கே.நகர் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதோடு இல்லாமல் கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில் 15 குழுக்கள் அமைத்து மாஞ்சா நூல் விற்பனை மற்றும் தயாரிக்கும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வழக்கமான பாணியில் போலீசார் மீஞ்சூர், அதத்திப்பட்டு வ.உ.சி.நகரில் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் தயாரிக்கும் மையத்தை கண்டுபிடித்தனர். அங்கிருந்து தடைசெய்யப்பட்ட 1,300 பட்டம் மற்றும 25 மாஞ்சா நூல் கண்டுகள் மற்றும் தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு தங்களது பணியை போலீசார் முடித்து கொண்டனர்.

3 வயது சிறுவன் அபிநேஷ் ராவ் இறந்து ரத்த ஈரம் காய்வதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரை சேர்ந்த ராஜசேகரன்(25) பைக்கில் புளியந்தோப்பு கன்னிகாபுரம் வழியாக செல்லும் போது மாஞ்சா நூல் கழுத்தில் சுற்றி அறுத்தது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அபிநேஷ் ராவ் இறப்பிற்கு பிறகாவது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து இருந்தால் மற்றொரு சம்பவம் நடந்து இருக்காது. போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் பின் பற்றி இருந்தால் இந்த இரண்டு சம்பவங்களும் நடந்து இருக்காது என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகின்றனர். மாஞ்சா நூல் காரணமாக அசம்பாவிதங்கள் நடந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் மற்றொரு சம்பவம் நடந்து இருக்காது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இனியாவது, சென்னை மாநகர போலீசார் விழிப்புடன் மாஞ்சா நூல் விற்பனை மற்றும் தயாரிக்கும் நபர்கள், மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் மீது அறிவித்தப்படி ஜாமினில் வெளி வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாஞ்சா நூலால் ஏற்படும் உயிரிழப்புகளை போலீசார் தடுக்க முடியும். இந்த இரண்டு சம்பவங்களை தொடர்ந்து போலீசார் பெயரளவில் செயல்படாமல் பொதுமக்களின் உயிர்மீது அக்கறை செலுத்த வேண்டும் என்று சென்னை மக்களின் ஒட்டு மொத்த குரலாக உள்ளது.

வழக்கு பதிவு எண்ணிக்கை:
மாஞ்சா நூலில் பட்டம் விட்டதாக வடசென்னையில் 2019ம் ஆண்டில் மட்டும் 14 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படும் பொருட்கள்:
மாஞ்சா நூல் தயாரிக்க மூலப்பொருட்களாக, நன்கு அரைக்கப்பட்ட கண்ணாடி துகள்கள், நூல், வஜ்ரம், ஊமத்தம் பால் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலப்பொருட்கள் ஊமத்தம் பாலில் சிறிது நேரம் ஊறவைத்து நூலை காயவைத்தால் மாஞ்சா நூல் தயார். இப்படி தயாரிக்கும் மாஞ்சா நூல் நீளத்திற்கு ஏற்றப்படி ரூ.300 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

காலாவதியான அவசர எண்:
2015ம் ஆண்டு அஜய்(5) என்ற சிறுவன் மாஞ்சா நூலில் கழுத்து சிக்கி உயிரிழந்தார். அப்போது சென்னை மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் மாஞ்சா நூல் தொடர்பான புகார் அளிக்க பிரத்தியேகமாக ‘044 - 2561 5086’ என்ற சிறப்பு எண் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த எண் தற்போது செயல்பாட்டில் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Chennai ,motorists , Chennai, Driving, Threat, Degree,, Manja Yarn
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...