×

தீர்ப்பை மதிக்கிறோம்: இஸ்லாமிய அமைப்புகள் கருத்து

அனைத்து இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், `நாங்கள் நமது நிலைப்பாட்டுக்கு வலுசேர்க்க உறுதியான ஆதாரங்களை அளித்ேதாம். ஆனாலும், மாற்றமான தீர்ப்பு வந்துள்ளதால் தீர்ப்பு தொடர்பாக நமது  சட்ட நிபுணர் குழு மறுஆய்வு செய்யும்’ என தெரிவித்துள்ளது.அனைத்து இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இ முஷவாரத் தலைவர் நவீத் ஹமித் கூறுகையில், `‘இந்த நேரத்தில் நாட்டில் அமைதியும், மதநல்லிணக்கமும் நிலவ பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,’’ என்றார். அனைத்து இந்திய ஷியா தனி  சட்ட வாரியம் செய்தி தொடர்பாளர் மவுலானா மிர்சா யாசூப் அப்பாஸ் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியத்துடன் இணைந்து செயல்படுவோம்,’’ என்றார்.ஜெய்ப்பூர் அஜ்மீர் தர்கா தலைவர் ஜெயினுல் அபிதின் அலி கான் தீர்ப்பை வரவேற்று கூறுகையில், ‘`நீதித்துறை அமைப்புகளில் உயர்ந்தது உச்ச நீதிமன்றம். எனவே, அதன் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். உலகத்தின் முன் ஒன்றுபட்ட  முகத்தை காட்ட வேண்டிய தருணம் இது. ஏனெனில், உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை கூர்ந்து கவனித்து வருகின்றன,’’ என்றார்.

அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்ததால் மிக  மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்யப் போவதில்லை,’’ என்றார்.இஸ்லாம் கருத்தரங்க துருல் உலும் தியோபந்த் அமைப்பின் துணை வேந்தர் முப்தி அப்துல் காசிம் நோமினி கூறுகையில், `‘மசூதிக்கு ஆதரவாக போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும், அதை நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவில்லை.  இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும், மக்கள் அமைதியும் மதநல்லிணக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்,’’ என்றார்.

உண்மை, நீதி வென்றுள்ளதுஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து
மோகன் பகவத் (ஆர்எஸ்எஸ் தலைவர்): உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கு தற்போது சரியான முடிவை எட்டியுள்ளது. இதை வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதக்கூடாது.  இந்த வழக்கில் உண்மையும் நீதியுமே வென்றுள்ளது. 5 நீதிபதிகள் ஒருமனதாக அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்பினோம், அது நடந்துள்ளது. எனவே அனைத்து சமூகத்தினரும்  நாட்டில் அமைதி மற்றும் மதநல்லிணக்கம் நிலவ ஒத்துழைக்க வேண்டும். அயோத்தி வழக்கில் வரலாற்று பின்னணி கொண்ட அமைப்பாகவே ஆர்எஸ்எஸ் பங்கேற்றது. போராட்டம் நடத்துபவர்களாக நாங்கள் ஒருபோதும் பங்கேற்கவில்லை.

டிவிட்டரில் டாப் 5 இடங்களில் டிரெண்டிங் ஆன அயோத்தி
உலகளவில் டாப் 10 டிரெண்டிங்கில் 4 ஹேஷ்டேக்கும், இந்திய அளவில் 5 ஹேஷ்டேக்கும் நேற்று அயோத்தி வழக்கு தொடர்பானதாக இருந்தது. அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளிக்க இருந்த நிலையில், `அயோத்யா  வெர்டிக்ட்’, `ராம்மந்திர்’ ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகள் மதியம் 2.30 மணிவரை இந்தியா மற்றும் உலக அளவில் டிரெண்டிங் ஆக இருந்தது. இதில் அயோத்யா வெர்டிக்ட் 5,50,000 முறையும், ராம்மந்திர் 1,60,000 முறையும் டிவிட்  செய்யப்பட்டிருந்தன. சுப்ரீம்கோர்ட் என்ற ஹேஷ்டேக்கும் 2 லட்சம் முறை டிவிட் செய்யப்பட்டிருந்தது. இது தவிர, `பாப்ரிமஸ்ஜித்’, `அயோத்யா ஜட்ஜ்மென்ட்’, `ராம்ஜென்மபூமி’ உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் அதிகளவில் டிரெண்டிங்காக  இருந்தன. தலைமை நீதிபதி `ரஞ்சன் கோகாய்’ ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இடம் பெற்றிருந்தது.

Tags : organizations , Respecting , Islamic organizations ,opinion
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!