×

வெற்றி பெற்றது இந்தியாதான்...துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில், ‘‘கடந்த காலத்தை மறப்போம். அமைதி, மதநல்லிணக்க, வளமான இந்தியாவை உருவாக்க முன்னேறி செல்வோம். இந்த தீர்ப்பால் வெற்றி பெற்றது இந்தியாதான். ஒன்றாக வாழ  வேண்டும் என்ற நமது ஆசை வெற்றி பெற்றுள்ளது. இந்த சிறந்த பூமியில் அனைவருக்கும் இடம் உள்ளது. நமது சிறப்பான பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைதி மற்றும் வளத்தை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாக  முன்னேறுவோம்,’’ என்றார்.

மைல்கல் தீர்ப்பு: அமித்ஷா கருத்து
பாஜ தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு: ராமஜென்ம பூமி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒருமித்த தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த முடிவை அனைத்து சமுதாய மக்களும் ஏற்று அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் கூடிய ‘ஒரே இந்தியா-சிறந்த இந்தியா’ என்பதில்  உறுதியாக இருக்க வேண்டும். இந்த சிறப்புமிக்க தீர்ப்பு, நாட்டுக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும். இந்த தீர்ப்பு, நமது நாட்டின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் சிறந்த கலாசாரத்தை மேலும் வலுப்படுத்தும். பல ஆண்டு காலமாக நீடித்த  அயோத்தி வழக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் நீதித்துறையும், அனைத்து நீதிபதிகளையும் பாராட்டுகிறேன். இதற்காக பல ஆண்டு காலமாக போராடிய அனைத்து அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன்.

அன்பை வெளிப்படுத்துங்கள்: ராகுல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஒவ்வொருவரும் மதித்து, மதநல்லிணக்கத்தை பின்பற்ற வேண்டும். இந்தியர்கள் இடையே  சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது,’ என கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் நாடு: பிரியங்கா
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உச்ச நீதிமன்றத்தின் முடிவு எதுவாக இருந்தாலும், இந்த நேரத்தில் நமது பாரம்பரியான ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டியது நமது  பொறுப்பு. இது மகாத்மா காந்தியின் நாடு. அமைதி மற்றும் அகிம்சையை பின்பற்ற வேண்டியது நமது கடமை,’ என கூறியுள்ளார்.

எல்லாம் அத்வானிக்கே
அயோத்தி நில வழக்கில் ராமஜென்ம பூமி இயக்கம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமான பாஜ மூத்த தலைவர் எல்கே அத்வானி, அசோக் சிங்கால் உள்ளிட்ட இந்து மத தலைவர்களின் பங்களிப்பை பல்வேறு இந்து மத தலைவர்கள்  புகழ்ந்துள்ளனர்.  
முரளி மனோகர் ஜோஷி (பாஜ மூத்த தலைவர்): வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை அனைத்து சமுதாயத்தினரும் திறந்தமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். உமாபாரதி (முன்னாள் மத்திய அமைச்சர்): தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அத்வானியின் காலில் விழுந்து வணங்கினேன். இந்த வழக்கு வெற்றி பெற அத்வானியும், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலும் காரணம். கோயில் மீது  அத்வானிக்கு உள்ள பக்தியே பாஜ.வின் வெற்றிக்கு காரணம். அதனால் நான் பாஜ.வால் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரமுடிந்தது.

கோவிந்தாச்சார்யா (முன்னாள் ஆர்எஸ்எஸ் நிர்வாகி): இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ராமர் கோயிலில் இருந்து ராமராஜ்யத்தை நோக்கி இந்த நாடு செல்கிறது. ராமர் கோயில் கட்டுவது தொடர்பான இந்த இயக்கத்தின் ெவற்றியின்  பின்னணியில் பல லட்சம் பேரின் தியாகம் மறைந்துள்ளது. இதில் அசோக் சிங்கால், எல்கே அத்வானி ஆகியோருக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். ரவிசங்கர் (சமரச குழு உறுப்பினர்): நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இதன் மூலம், இரு தரப்பினருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. யோகா குரு ராம்தேவ்: இந்த தீர்ப்பின் மூலம் உலக அரங்கில் ஒற்றுமைக்கு நாம் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறோம்.

60% தூண்கள் தயார் 2024ல் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் சதாசிவ் கோக்ஜி கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பால் யாருக்கும் வெற்றி, தோல்வி என்ற கேள்விக்கே இடமில்லை. நூற்றாண்டுகால பிரச்னை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இது  வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ஏற்கனவே ராம ஜென்ம நிவாஸ் தயாரித்துள்ள வடிவமைப்பில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். கோயிலுக்கான நிறைய பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. 2  தளத்திற்கான பணிகள் நிறைவடைந்து விட்டன. 60 தூண்கள் தயார் நிலையில் உள்ளன. நிலத்தை பெறுவது எவ்வளவு சவாலாக இருந்ததோ, அதே அளவுக்கான சவால் இக்கோயிலை கட்டி முடிக்கவும், அதை நிர்வகிப்பதிலும் இருக்கும். 2024ம்  ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப்பட்டு விடும் என நம்புகிறேன்’’ என்றார். அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த 1985ல் விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் ராம் ஜென்மபூமி நிவாஸ் குழு அமைக்கப்பட்டது.

‘ராமரை வைத்து பாஜ இனி அரசியல் செய்ய முடியாது’
டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்ட கூட்டத்துக்குப் பிறகு, இக்கட்சியின்  செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் நிச்சயமாக, ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பு யாருக்கும், எந்த அமைப்பினருக்கும், எந்த சமுதாயத்தினருக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் சாதகமான அல்லது பாதகமான தீர்ப்பு அல்ல. மக்களின் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் மதித்துள்ளது. இந்த தீர்ப்பு ராமர் கோயில் கட்ட வழி  வகுத்துள்ளது. நாட்டின் நம்பிக்கையுடன் பாஜ.வும், இதர அமைப்பினரும் அரசியல் செய்வதை இந்த தீர்ப்பு நிரந்தரமாக தடுத்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் கடந்த 1993ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான் கையகப்படுத்தப்பட்டது.  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும்,’’ என்றார்.

ராமர் கோயில் கட்ட ஆதரவு காங். காரியக்குழு தீர்மானம்
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் கட்சியின் காரியக் குழுவின் கூட்டத்தை அவசரமாக கூட்டி, ஆலோசனை நடத்தினார். பின்னர், அதில் நிறைவேற்றிய  தீர்மானத்தில், ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சமுதாயத்தினரும், மதச்சார்பின்மையை கடைபிடித்து, அரசியல் சாசனத்தில் உள்ள சகோதரத்துவத்தை பின்பற்றி அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்,’ என  கூறப்பட்டுள்ளது.

மனு தள்ளுபடியால் வருத்தம் இல்லை
உத்தரபிரதேச மாநில ஷியா வக்ப் வாரிய தலைவர் வாசிம் ரிஷ்வி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். கண்ணியமான முறையில் இந்த வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தியவர்களுக்கு எனது வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அமைப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது பெரிய விஷயமல்ல. ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படவேண்டும் என்ற தீர்ப்பு வாரியத்துக்கு கிடைத்த வெற்றி.


Tags : Venkaiah Naidu ,winner ,India , India ,, winner, Vice President ,Venkaiah Naidu
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...