×

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு சிறையில் இருந்த 13 பேர் பொதுமன்னிப்பில் விடுதலை

மதுரை: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மேலூர் ராமர் உள்ளிட்ட 13 பேர், தமிழக அரசின் பொதுமன்னிப்பு அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு பஞ்சாயத்து தனி தொகுதியில் போட்டியிட்டு தலித் சமுதாயத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வெற்றி பெற்றார். தங்களின் எதிர்ப்பையும் மீறி போட்டியிட்டு வெற்றி பெற்றதால் ஆத்திரம்  அடைந்த மற்றொரு சமூகத்தினர் பஞ்சாயத்து தலைவர் முருகேசனை கொல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 1997, ஜூன் 30ல் பஸ்சில் சென்று கொண்டிருந்த முருகேசன் உட்பட 7 பேரை மடக்கி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை  செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட் வரை அப்பீல் செய்தும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மதுரை சிறையில் இருந்த இவர்களில் 3 பேர் ஏற்கனவே நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு, பத்தாண்டுகள் கழித்த சிறைவாசிகள்  பொதுமன்னிப்பு  அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் கைதாகி, சிறையில் இருந்த ராமர் உள்பட 13 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இதன்படி சிறை டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் நேற்று இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.



Tags : panchayat leader ,prisoners , panchayat, leader murder, amnesty
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்