×

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கும் விருப்பத்தை பாரதிய ஜனதா தெரிவிக்க வேண்டும்: பட்நவிசுக்கு ஆளுநர் கடிதம்

மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதற்கான தனது விருப்பம் மற்றும் ஆற்றலை தெரிவிக்கும்படி பா.ஜனதாவை, மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கேட்டுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 288 உறுப்பினர் கொண்ட சட்டசபையில், கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56  இடங்களிலும் வெற்றி பெற்றன.இதேபோல மற்றொரு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்ைம பலம் கிடைத்தபோதிலும் முதல்வர்  பதவி குறித்த மோதல் காரணமாக, இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க பா.ஜனதா திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதனால் புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கடந்த வெள்ளிக்கிழமை தமது பதவியை ராஜினமா செய்தார்.

அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, காபந்து முதல்வராக நீடிக்கும்படி தேவேந்திர பட்நவிசை கேட்டுக்  கொண்டார். இந்நிலையில், மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதற்கான தனது விருப்பத்தையும் அதற்கான தகுதியையும் தெரிவிக்கும்படி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய பா.ஜனதாவை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி நேற்று மாலையில்  கேட்டுக் கொண்டார். ஆளுநரிடம் இருந்து இதற்கான கடிதம் வந்திருப்பதை காபந்து முதல்வரும் பா.ஜனதா சட்டசபை கட்சித் தலைவருமான தேவேந்திர பட்நவிஸ் உறுதி செய்தார். புதிய அரசு அமைப்பதற்கான விருப்பத்தையும் அதற்கான  தகுதியையும் தெரிவிக்கும்படி முதல்வர் பட்நவிசை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகியும், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க இதுவரை உரிமை கோரவில்லை என்பதால், புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியங்களை ஆராய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முடிவு  செய்திருப்பதாக ராஜ்பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags : Patnavis ,Governor ,Maharashtra ,Bharatiya Janata Party , Maharashtra, Bharatiya Janata Party,government,Patnavis
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...