×

மது போதையில் பேருந்து இயக்குவதை தடுக்க விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: போக்குவரத்து கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: மது போதையில் பேருந்துகளை இயக்குவதை தடுப்பதற்கான விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று போக்குவரத்து கழகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருவொற்றியூரை சேர்ந்தவர் கண்ணபிரான். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 1989 டிசம்பர் 21ம் தேதி திருவொற்றியூரிலிருந்து பேருந்தை ஓட்டி வந்தபோது மது அருந்தியிருந்ததால்  சரியாக பேருந்தை ஓட்ட முடியவில்லை. இதையடுத்து, பேருந்தை ராஜாகடையில் நிறுத்திவிட்டு பயணிகளை இறங்கச் சொல்லி அவர்களை வேறு பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக கண்ணபிரானை பணி நீக்கம் செய்து போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கண்ணபிரான் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் உதவி மேலாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.  அதை படித்து பார்த்த நீதிபதி அளித்த உத்தரவு: மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பணி நேரத்தில் குடிபோதையில் இருந்தால் அவர்களை கண்டறிய திடீர் சோதனை நடத்தப்படுகிறது. டெப்போக்களில் இருந்து பேருந்துகளை வெளியே  கொண்டுவரும்போது அந்த பேருந்தின் ஓட்டுநரிடம் மது அருந்தியிருக்கிறாரா என்று சுவாச சோதனை நடத்தப்படுகிறது. அவர் மது அருந்தியது தெரிந்தால் பேருந்தை இயக்க அவருக்கு அனுமதி தரப்படுவதில்லை. மது அருந்தியதாக ஓட்டுநர் மீது புகார் வந்தால் அவருக்கு பதிலாக வேறு ஓட்டுநர் நியமிக்கப்பட்டு பேருந்தை இயக்க நிலைய கட்டுப்பாளருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. மதுபோதையில் பேருந்து ஓட்டுவது, பயணிகளிடம் கண்ணியக்குறைவாக நடப்பது ஆகியவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் மது போதையில் பேருந்தை ஓட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. மது போதையில் பேருந்தை இயக்குபவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு கடும் தண்டனை வழங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு மாநில அரசின் அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும், கிளை அதிகாரிகளுக்கும் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Transport Corporations ,High Court Advice High Court , bus, liquor, High Court Advice , Transport ,Corporations
× RELATED சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை...