×

அயோத்தி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக தலைவர்கள் கருத்து அயோத்தி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக தலைவர்கள் கருத்து

சென்னை: அயோத்தி தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ் தலைவர்): உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று சிலரோ, நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சிலரோ கருதுவதில் எந்த  பலனும் இல்லை. இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயமாக இந்திய சமுதாயம் திகழ வேண்டும்.முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: இந்த தீர்ப்பு இந்திய நீதித்துறையின் நீதி பரிபாலனத்தில் மிக முக்கிய முத்திரை பதித்ததாக அமைந்துள்ளது. எத்தரப்புக்கும் பாதகமின்றி அமைந்துள்ள இத்தீர்ப்பு அனைவராலும் ஏற்கப்பட்டு  வரவேற்கப்படும் காட்சியை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இத்தீர்ப்பால் மன நிறைவு கொள்வார்கள் என நம்புகிறேன். ராமதாஸ்(பாமக நிறுவனர்): சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை குறித்த காலக்கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதேபோல், மசூதி கட்டுவதற்கு ஏற்ற, முக்கியமான பகுதியில் 5 ஏக்கர்  நிலத்தை வழங்கவும் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.வைகோ(மதிமுக பொது செயலாளர்): மதங்களை கடந்த மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது. எனவே மத நல்லிணக்கம் சீர்குலைய வழிவகுத்துவிடாமல், எதிர்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைத்துத்  தரப்பினருக்கும் இருக்கிறது.முத்தரசன்(சி.பி.ஐ. மாநில செயலாளர்): எந்தவொரு தரப்பும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதாமல் நீதி பரிபாலன முறையின் உச்ச அமைப்பு வழங்கிய தீர்ப்பில் மதச்சார்பின்மை என்பது அரசில் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பு  என்று கூறியிருப்பதை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்க சூழலை பராமரித்து வருவது குடிமக்களின் கடமைப் பொறுப்பு என்பதை உணர்ந்து, அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்(சிபிஎம். மாநில செயலாளர்): எந்த ஒரு மத வழிபாட்டுத்தலம் மீதும் புதிய சர்ச்சையைக் கிளப்புவதற்கு அனுமதித்தல் கூடாது. மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான  கடமை.
வி.சி.க. தலைவர் திருமாவளவன்: அரசாங்கத்தின் ஏனைய உறுப்புகள் சிதைத்து சின்னாபின்னமாகிவிட்ட நிலையில் இந்திய மக்கள் இப்போது தமது பாதுகாவலாக உச்ச நீதிமன்றத்தைத்தான் பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு  காப்பாற்றிவிட்டதெனக் கூற முடியவில்லை. இந்தத் தீர்ப்பின் மீதான சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் நீதி கிடைக்கும் என நம்புவோம். அதுவரை அமைதியோடு யாருடைய ஆத்திரமூட்டலுக்கும் பலியாகாமல் மதநல்லிணக்கம்  காப்போம்.
கே.எம்.காதர் மொகிதீன்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்) உச்சநீதிமன்றத்  தீர்ப்பை மதிப்பதும், அதனை ஏற்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு  எல்லோரும் உடன்பட்டு ஒத்துழைப்பதும் இன்றைய காலத்தின் கட்டாயத்  தேவை.
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): அயோத்தி வழக்கின் தீர்ப்பை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு நாட்டின் உறுதிக்கும், ஒற்றுமைக்கும் உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.

டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): அயோத்தி வழக்கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்துத் தரப்பினரும் அணுகிட வேண்டும். இந்த நேரத்தில் அமைதியையும்  நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி: நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கொள் காட்டி தீர்ப்பின் வாசகங்கள் அமைந்திருக்கிறது. இத்தீர்ப்பு வெளியானதும், பெரும்பாலான இந்து சமுதாய உறவுகள் முஸ்லிம்களை நோக்கி;  ஆதரவு கரம் நீட்டி, ஆறுதல் கூறி வருவது நெகிழ்ச்சியளிக்கிறது. இத்தருணத்தில் அனைத்து தரப்பும்  ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சரத்குமார்(சமக தலைவர்): உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக வெற்றியோ,  தோல்வியோ அடைந்ததாக எந்த தரப்பினரும் கருத வேண்டாம். நீதிமன்ற தீர்ப்பினை  இறுதித்தீர்ப்பாக ஏற்றுக்கொண்டு அனைத்து இந்திய மக்களும் ஒற்றுமையுடன்   மதநல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்.விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் செயல் தலைவர் எஸ்.வேதாந்தம்: ராமஜென்ம பூமி விஷயமாக அருமையான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதை இந்து, முஸ்லீம் பிரச்னை என்று பார்க்காமல், மாற்றானால் கட்டப்பட்ட ஒரு  கட்டிடத்தை மாற்றி பழைய கோயிலை புதுப்பித்ததாக எடுத்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கிடைத்த வெற்றி.

நெல்லை முபாரக்(எஸ்டிபிஐ கட்சி தலைவர்): நீதியின் அடிப்படையிலும்,  சட்டத்தின் அடிப்படையிலும் தீர்ப்பானது  இருக்கும் என நாங்கள் நம்பினோம்.  ஆனால், நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு என்பது ஏமாற்றமளிக்கிறது. எங்களைப்  போன்ற  ஜனநாயக சக்திகளுக்கு வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது.வி.எம்.எஸ்.முஸ்தபா(தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): தீர்ப்பு  ஏதுவாக இருந்த போதிலும் சட்டத்தை மதிக்க வேண்டியது நமது அனைவரின் கடமை.  அந்த வகையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று அனைத்து  தரப்பினரும்  அமைதி காத்து நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்.

Tags : leaders ,Nadu ,Ayodhya Issue Supreme Court , Ayodhya , Tamil Nadu ,leaders ,comment
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...