×

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்: போக்குவரத்துத்துறை கமிஷனர் தகவல்

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என போக்குவரத்துத்துறை கமிஷனர் சமயமூர்த்தி தெரிவித்தார். கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகன ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் இது  போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த கண்காணிப்பு கேமராக்களும் ஜிபிஎஸ் கருவிகளும் எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வி துறை சார்பில்  விளக்கமளிக்கப்பட்டது. இந்த கருவிகளின் மூலம் பள்ளி வாகனங்களை முழுமையாக கண்காணிக்க அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அனைத்து  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அரசின் இந்த உத்தரவை ஒரு மாதத்தில் நிறைவேற்றி அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை முடிக்க வேண்டும்  என உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் அனைத்து ஆர்டிஓக்களும், தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளில் இயக்கப்பட்டு வரும் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்க  வேண்டும் எனக்கூறியது. அதன்படி ஆர்டிஓக்கள், தங்களது பகுதிகளில் உள்ள பள்ளி நிர்வாகங்களிடம் சென்று, கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கும்படி கூறி, அதற்கான செயல்பாடுகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது  தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான பஸ்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை கமிஷனர் சமயமூர்த்தி கூறியதாவது:தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் பள்ளி வாகனங்களின் போக்குவரத்தை கண்காணிக்க தனியார் பள்ளிகளில் கட்டுப்பாட்டு  அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெருந்துறை உள்ளிட்ட இடங்களிலிருக்கும் தனியார் பள்ளிகள் இதை செயல்படுத்தி விட்டன. மற்ற இடங்களில் உடனடியாக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தி,  கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.கட்டணம் உயரும்?பஸ்களில் தற்போது சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இப்பஸ்களில் பயணிக்கும் மாணவ, மாணவியரிடம் பள்ளி நிர்வாகங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போது சிசிடிவி கேமராவை  காரணம் காட்டி மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : traffic commissioners , CCTV camera , school ,traffic commissioners
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...