×

தலை முதல் கால் வரை தீயணைப்புத்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம்: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

சென்னை: தமிழகம் முழுவதும் 322 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு கோட்டத்துக்கும் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பெரிய கட்டிடங்கள், குறிப்பாக வணிக வளாகங்கள், வர்த்தக  மையங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்றால் தீயணைப்புதுறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இதனால் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு இந்த அனுமதி  வழங்குவதில் பெரிய அளவில் வசூல் வேட்டையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்டிடத்துக்கு அனுமதி பெற வேண்டும் என்றால், நேரடியாக அதிகாரிகளை அனுகி கேட்க முடியாது. முதலில் அதற்கான புரோக்கர்களை  அனுக வேண்டும்.இல்லாவிட்டால் அனுமதி கேட்கும் அலுவலகத்தில், அவர்களே புரோக்கர்களை அடையாளம் காட்டுவார்கள். புரோக்கர்கள் உயர் அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம், தனக்கு எவ்வளவு என்பதை தெரிவிப்பார். பணத்தைக் கொடுத்தால் அதிகாரிகள்  பெயருக்கு விசிட் வந்து விட்டு, அறிக்கை கொடுப்பார்கள். அவ்வாறு அறிக்கை கொடுத்த பல கட்டிடங்களில் பெரிய அளவில் தீ விபத்து நடந்துள்ளது. ஆனால் முறைகேடாக பணம் கொடுத்த அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. இதனால் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி குவிக்கின்றனர். தீயணைப்புத்துறையில் நேர்மையான அதிகாரிகளே இல்லாத அளவில் அவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

நேர்மையாக செயல்படுவதாக கூறும் அதிகாரிகள் கூட மறைமுகமாக தங்களது உறவினர்கள் அல்லது சில பெண் அதிகாரிகள் தங்களது கணவன் மூலமாக லஞ்சம் பெறுகின்றனர். அவர்களும் பல மனுக்களை தள்ளுபடி செய்து விட்டு,  தங்களுக்கு வேண்டிய மனுக்கள் மீது விதிமுறைகளை மீறி அனுமதி கொடுத்து வருகின்றனர். ஆனால் உயர் அதிகாரிகள் என்பதால் அவர்கள் சிக்காமல் தப்பித்து வருகின்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார்கள் சென்றன.  அவர்களும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். தற்போது அவர்கள் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளனர்.இந்தநிலையில்தான் வடசென்னை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரியாக இருந்த ராஜேஸ்கண்ணன், தீபாவளி நேரத்தில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட தகவல் தெரியவந்ததால், அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தி ₹1.6 லட்சத்தை  கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிக்கு கொடுக்க வேண்டும் என்று வைகுண்டம் தீயணைப்புத்துறை அதிகாரி, கோழிப்பண்ணை உரிமையாளரிடம் ₹5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  தீயணைப்புத்துறை அதிகாரி ரோலன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவர் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றுதான் வாங்கியுள்ளார். அதேநேரத்தில், இந்த புகார் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் நேரடியாக புகார் அளித்தார். அதைத் தொடர்ந்துதான் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தற்போது உயர் அதிகாரிகளை  தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் காப்பாற்ற முயற்சிப்பதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன.

மேலும், கோவையிலும் நேற்று தொழில் அதிபரிடம் பெட்ரோல் பங்க் தொடங்க 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இப்போதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சாட்டையை சுழட்டத் தொடங்கியுள்ளனர். தற்போது  தீணைப்புத்துறைக்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்றுள்ளார். இவர் நேர்மையாக செயல்படுவார். இதனால் அவரும் தீயணைப்புத்துறையில் அதிகாரிகள் திறம்பட செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்மட்ட தீயணைப்பு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பல  ஆண்டுகளாக ஒரே துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பல துறைகளில் அதிகாரிகளுடன் நேரடியான தொடர்பில் உள்ளனர். புகார்கள் வந்தால், அந்தப் புகாரை நேரடியாக சம்பந்தப்பட்டவரிடமே கொடுத்து குறிப்பிட்ட அளவில் லஞ்சம்  வாங்கிக் கொண்டு அமைதியாகி விடுகின்றனர். நேர்மையாக செயல்படுவதாக கூறும் அதிகாரிகள் கூட மறைமுகமாக தங்களது உறவினர்கள் மூலமாக லஞ்சம் பெறுகின்றனர்.

Tags : toe Fire Officials ,head , toe, Fire, reluctant ,action
× RELATED கொரோனா தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் பேட்டி