×

வெயில் கொளுத்திய நிலையில் சென்னையில் திடீர் மழை தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெயில் கொளுத்திய நிலையில் சென்னையில் நேற்று திடீரென மழை பெய்தது. மேலும் தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த மாதம் கியார், மகா என்ற 2 புயல் உருவானது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. தென் மாவட்டங்களில் கனத்த மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் லேசான  மழை பெய்தது. அதன் பிறகு தமிழகத்தில் மழை பொய்த்தது. சென்னையை பொறுத்தவரை கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெயில் வாட்டி எடுத்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்  காணப்பட்டது. இதனால், வெப்பம் தணிந்தது. பிற்பகல் 2 மணியளவில் திடீரென சென்னையில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணா சாலை, கோட்டூர்புரம், அடையாறு, திருவான்மியூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் மழை  பெய்தது. இதனால் இரவு வரை குளிர்ச்சியான நிலை காணப்பட்டது. இதேபோல தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்தது.

இந்நிலையில், இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களின் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில்  கனமழையும் பெய்யக் கூடும். புல்புல் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழக கடல்பகுதியில் மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் இல்லை. கடந்த 24 மணி  நேரத்தில் அதிகபட்சமாக சேந்தமங்கலம் 14 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. ஓமலூர், செங்கத்தில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Chennai ,country ,districts , Heavy rains , Chennai, heavy rain ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!