×

சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி

* 3 மாதத்தில் அறக்கட்டளை அமைக்க உத்தரவு * மாற்று இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் *சுப்ரீம் கோர்ட் 5 நீதிபதிகள் அமர்வு ஒருமித்த தீர்ப்பு

புதுடெல்லி: பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நில சர்ச்சை வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், ‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலமும் இந்துக்களுக்கு  சொந்தமானது. அங்கு ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமிய அமைப்புகளுக்கு அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும். கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும்’ என்று  உத்தரவிடப்பட்டு உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘மனுதாரர்களான சன்னி வக்பு வாரியம், நிர்மோகி  அகாரா மற்றும் ராம் லாலா ஆகிய 3 தரப்பும் நிலத்தை மூன்று பாகமாக சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்த 3 தரப்பினர் உட்பட மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டன. முதலில் தலைமை நீதிபதி அமர்வில் இவை விசாரிக்கப்பட்டன. பின்னர், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.  இதில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே,  டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றனர். இவர்கள் இந்த வழக்குகளை ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை தொடர்ந்து 40 நாட்கள் தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தினர். அனைத்து  தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அன்றைய தினம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தலைமை நீதிபதி கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.  இதையடுத்து, இந்த வழக்கில் எந்த நேரத்திலும் அவர் தீர்ப்பு  வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

 இந்நிலையில், கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசாருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டது. அயோத்தியில் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டன. நேற்று முன்தினம், உத்தர பிரதேச  மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி.யை தலைமை நீதிபதி கோகாய் திடீரென டெல்லிக்கு அழைத்தார். அவர்களிடம் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதனால், திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சனிக்கிழமை காலை 10.30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் திடீரென  அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ‘தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை அனைவரும் ஏற்க வேண்டும்’ என பிரதமர் மோடி முதல், அனைத்து கட்சிகளும், இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்தன. நேற்று காலை மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். நீதிமன்றங்களில் வலம் வந்து கொண்டிருந்த அயோத்தி நில சர்ச்சை வழக்கில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதால், அந்த செய்தியை சேகரிக்க உச்ச நீதிமன்றத்தை ஊடகங்கள் முற்றுகையிட்டன. இந்த பரபரப்புக்கு இடையே தலைமை நீதிபதி கோகாய் உட்பட, அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்ற ஐந்து நீதிபதிகளும் நீதிமன்றத்துக்கு ஒவ்வொருவரான வரத் தொடங்கினர்.

சரியாக காலை 10.30க்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. மொத்தம் 1045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு பக்கங்களின், முக்கிய அம்சங்களை மட்டுமே நீதிபதிகள் வாசித்தனர். இதற்காக, அவர்கள் 45 நிமிடங்கள் எடுத்து கொண்டனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நாங்கள் அனைவரும் ஒருமித்த உத்தரவை பிறப்பிகிறோம். இந்த வழக்கில் நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது. ஒரு மத நம்பிக்கை என்பது பிற மத நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. மதங்களில் இருக்கும் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு. குறிப்பாக அமைதியை காக்கும் வகையிலும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் வழங்கப்படும் அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும். இந்த வழக்கில் நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோகி அகாராவின் மனுவில் எந்தவித முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை. நிலத்தின் உரிமையை யாரும் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது. இந்த வழக்கில் தொல்லியல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை எக்காரணத்தை கொண்டும் நிராகரிக்க முடியாது. பாபர் மசூதி என்பது காலியிடத்தில் கட்டப்படவில்லை. மசூதி கட்டப்பட்ட இடத்தின் கீழ், இந்து மதம் சார்ந்த கட்டுமானம் இருந்ததை தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தி இருக்கிறார்கள். இதை பல்வேறு நாட்டுகளை சேர்ந்தவர்களின் பயணக் குறிப்புகளும் தெரிவிக்கின்றன. அதனால், அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட எந்த தடையும் கிடையாது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமும், அரசுக்கு சொந்தமானது என்பதை வருவாய் துறை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, இந்த நிலத்தை மத்திய அரசு தனது கட்டுபாட்டில் எடுத்து கொள்ள வேண்டும். இதில், கோயில் கட்டுவதற்கான 3 மாதங்களில் அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

அதே நேரம்,  இஸ்லாமிய அமைப்புகள் மசூதி கட்டுவதற்காக அயோத்திலேயே முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும். அந்த இடத்தில் இஸ்லாமிய அமைப்புகள், மசூதி கட்டிக் கொள்ள வேண்டும். இந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி  இஸ்லாமிய அமைப்பான வக்பு வாரியத்தின் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.  இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.தீர்ப்பு வெளியானதும் நாடு முழுவதும் இந்து, இஸ்லாமிய அமைப்புகள் அதை வரவேற்றன. இருதரப்பும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், 1528ல் தொடங்கிய ராமஜென்ம பூமி விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.


Tags : Rama Temple ,land ,Ayodhya , disputed land , Hindus, Permission ,build ,Rama Temple ,Ayodhya
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!