×

வேலூரில் இன்று நடக்கவிருந்த 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு திடீர் ரத்து: ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்

வேலூர்: வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் இன்று நடக்கவிருந்த 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு திடீர் ரத்து ஆனதால் தேர்வுக்கு வந்த இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம்நிலை காவலர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, தீயணைப்புத்துறை ஆகிய பிரிவுகளில் 2ம் நிலை காவலர் 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. தமிழகத்தில் 3.22 லட்சம் பேர் தேர்வு எழுதியதில், 46 ஆயிரத்து 700 பேர் தேர்ச்சி பெற்றனர். வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23,585 பேரில் 3,688 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் எழுத்துத்தேர்வில் பங்கேற்ற 9,164 பேரில் 1,334 பேரும் உடற்தகுதி தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாளும் 900 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 3 நாட்களில் நடந்த உடற்தகுதி தேர்வில் சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் 2ம் கட்ட உடற்பயிற்சிக்கு தகுதி பெற்றனர்.  

இதற்கிடையில், தமிழகத்தில் 15 மையங்களில் நடைபெற்று வந்த காவலர் பொதுத்தேர்வு நடைமுறைகளான உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்த்தல் ஆகிய தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு மறு அறிவிப்பு வரும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று நேற்றிரவு கூடுதல் காவல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதையறியாமல் 4வது நாளான இன்று வழக்கம்போல் நேதாஜி ஸ்ேடடியத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் வந்திருந்தனர். தேர்வு மைய நுழைவு பகுதியில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக  தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதைப்பார்த்த இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘2ம் நிலை காவலர் தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாலை பஸ்சை பிடித்து வேலூருக்கு வந்தோம். தற்போது தேர்வு ரத்தானதால் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்’ என தெரிவித்தனர்.

Tags : cancellation ,fitness test ,police officers ,Vellore , Vellore, guard, physical fitness exam, cancel
× RELATED பஸ் மீது லாரி மோதி விபத்து 4 பெண் போலீஸ் உள்பட 18 பேர் படுகாயம்