×

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும்...ராகுல் காந்தி டுவிட்

டெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி  அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு  உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை 3  மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோயில்  கட்டும் பணி நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மத்திய, மாநில   அரசுகளால் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்தது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு  நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை  மதிக்கும் போது நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும். இது நம் அனைவருக்கும் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பின்  காலம். இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அனைத்து தரப்பினரும் அயோத்தி தீர்ப்பை சமமான சிந்தனையுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை கண்டிருக்கிறது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை விருப்பு, வெறுப்புக்கு  உட்படுத்தாமல் மத நல்லிணக்கம் போற்றி அனைவரும் முன்னெடுத்து செல்வார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்

பாபர் மசூதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை என்று  திருமாவளவன் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் மற்றும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது  என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன்  தெரிவித்துள்ளார். மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை பன்பு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி

100 ஆண்டுகால அயோத்தி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது என்று கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவது போல உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அவர்  தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சாதக பாதக அம்சங்களை மனதில்கொண்டு நாட்டு நடப்பினையும் அறிந்து தெளிவான தீர்ப்பு  அளித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது என்று  அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின்  நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினருக்கும் வேறுபாடின்றி பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


இல.கணேசன்

உச்சநீதிமன்ற தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்; யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லாத தீர்ப்பு என்று பாஜக மூத்த தலைவர்  இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும், அனைவரும் மதிப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : Supreme Court ,Ayodhya ,Rahul Gandhi Dwight , Supreme Court verdict in Ayodhya case: All should maintain mutual harmony ... Rahul Gandhi Dwight
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...