×

அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும்: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்குத் தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது என்பதால், அனைவரும் நேர்மறையான முறையில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்தவிதமான பிரச்சினைகளினாலும் எதுவும் நடந்துவிடாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கூட, கேரள மாநிலமும், மக்களும் மிகவும் முதிர்ச்சியான வகையில் நடந்து கொண்டார்கள். இன்றும் அதேபோன்றே மக்கள் முதிர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள். அமைதியை நிலைநாட்ட அரசு முழுமையாக தயாராகி இருக்கிறது. அமைதியைக் குலைக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. போலீஸார் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

நாட்டில் பல்வேறு விரும்பத் தகாத சம்பவம் நடந்த அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை வைக்கலாம் என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றம் பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு மூலம் அயோத்தி நிலம் தொடர்பான சட்டபூர்வமான விஷயங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், மதிப்பளிக்க வேண்டும். இந்தியர்களாகிய நாம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பணிந்து நடக்க வேண்டும். மாநிலத்தின் அமைதி குலையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

Tags : Ayodhya ,Pinarayi Vijayan ,Supreme Court , Ayodhya, Supreme Court, Pinarayi Vijayan
× RELATED நடிகர் சங்க பிரச்சனை தொடர்பாக இரு...