×

அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் அமைதி காக்க பல்வேறு மாநில முதல்வர்கள் வேண்டுகோள்

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு விவரத்தை வெளியிடுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு தகவல் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை பொறுத்தவரை யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல. எனவே, நாம் அனைவரும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்


அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை தமிழக மக்கள் மதித்து நடக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தீர்ப்பை மதித்து சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு இடம் தராமல் தமிழகத்தை அமைதிப்பூங்கா மாநிலமாக திகழச் செய்யுங்கள் என்று முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவுக்கே தமிழகம் முன்னுதாரணமாக திகழ அனைத்து மத, கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரியங்கா காந்தி வேண்டுகோள்

அயோத்தி நில வழக்கு தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், பரஸ்பர அன்பு ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் வழியில் அமைதி மற்றும் அகிம்சையை கடைப்பிடிப்பது நமது கடமை என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒடிசா முதல்வர் வலியுறுத்தல்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதித்து நடக்குமாறு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீர்ப்பை மதித்து அமைதியையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுமாறு நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள முதல்வர் வேண்டுகோள்

அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் கேரள மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணையதள சேவை துண்டிப்பு

அயோத்தி தீர்ப்பு வெளியாவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மற்றும் முசாபர்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் நாளை காலை 6 மணி வரை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Ayodhya ,state chiefs ,Chief Ministers ,Supreme Security , Ayodhya Case, Ayodhya Verdict, Defense, Internet Service, Supreme Security, Chief Ministers, Peace Keeping
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்