தூத்துக்குடி அருகே விவசாயியிடம் 5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி கைது

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தர் (44). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை மற்றும் ஆட்டுப் பண்ணை அமைக்க முடிவு செய்து,  தடையில்லா சான்று கேட்டு தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு துறையிடம் விண்ணப்பித்துள்ளார். சான்று வழங்க தாமதமானதால் சுந்தர், மாவட்ட தீயணைப்பு அலுவலரை தொடர்பு கொண்டபோது, வைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலரை தொடர்பு கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டது. சுந்தர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரோலனை தொடர்பு ெகாண்டபோது, தடையில்லா சான்று வழங்க அதிகாரிக்கும், தனக்கும் 5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென கேட்டுள்ளார்.  ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து சென்னையிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு சுந்தர் புகார் மனு அனுப்பினார். அவர் தென்மண்டல எஸ்பியை தொடர்பு கொண்டு எச்சரித்தார். இதன்பின், உடனடியாக நடவடிக்கையில் இறங்கி வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில் உரிய விசாரணைக்குபின் சுந்தருக்கு, மாவட்ட தீயணைப்பு துறை மூலம் தடையில்லா சான்று ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைப்பெற சென்ற சுந்தரிடம் 5ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க முடியும் என நிலைய அதிகாரி ரோலன் கூறியுள்ளார்.  இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழிகாட்டுதலின்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரத்தை ரோலனிடம் சுந்தர் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories:

>