×

போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு வழங்கிய சார்ஜ் மெமோவுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு  வழங்கப்பட்ட குற்றச்சாட்டு மெமோவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் அக்டோபர் 25ம் தேதி காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். அரசு மருத்துவர்களின் கோரிக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 1ம் தேதி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக பல மருத்துவர்கள் தொலைதூர மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், அவர்களுக்கு குற்றச்சாட்டு மெமோவும் வழங்கப்பட்டது. இதையடுத்து, பணி இடமாற்ற உத்தரவு மற்றும் குற்றச்சாட்டு மெமோவை ரத்து செய்யக்கோரி பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் செய்யது நஷீர், சரளா பாய் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  இந்த வழக்கு நீதிபதி  எம்.தண்டபாணி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், போராட்டத்தில் ஈடுபட்ட எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் செய்தி வெளியிட்டார். ஆனால், எங்கள் சங்கங்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. மருத்துவர்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பணியாற்றுகிறார்கள். மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகள் மற்றும் உட்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு தரப்படும் சம்பளம் மிக குறைவு.

அரசின் உத்தரவாதத்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு நவம்பர் 1ம் தேதி காலை பணிக்கு திரும்பினோம். ஆனால், எந்த விதிகளையும் பின்பற்றாமல் நிர்வாக காரணம் எனக்கூறி எங்களை தொலை தூரத்திற்கு இடமாற்றம் செய்ததுடன் குற்றச்சாட்டு மெமோவையும் கொடுத்துள்ளனர். எனவே, எங்களை பணியிடமாற்றம் செய்த உத்தரவு மற்றும் எங்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு மெமோவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.  இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு மெமோவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இதே கோரிக்கைகளுடன் மேலும் பல மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே, அந்த வழக்குகளும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும். வழக்கு வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : doctors ,High Court , Struggle, charge memo, interim injunction, High Court
× RELATED சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெரும்...