இந்தாண்டு மின்துறைக்கு நஷ்டம் அதிகமாகியுள்ளது: அமைச்சர் தங்கமணி ஒப்புதல்

நாமக்கல்: இந்தாண்டு மின்துறைக்கு நஷ்டம் அதிகமாகியுள்ளது’’ என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக மின் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ‘தினகரன் நாளிதழ்’ கடந்த6ம்தேதி வெளியிட்ட செய்தி பற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது: தமிழக மின்சாரத்துறையில் ஒவ்வொரு ஆண்டும்  நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கொள்முதல், நிலக்கரிக்கான கொள்முதல் செய்வது அதிகமாகியுள்ளது. இருப்பினும் மின்சார கொள்முதல் குறைத்து வாங்கியுள்ளோம். போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. ஊழியர்களுக்கான சம்பளம் 1,200 கோடியாக கூடியுள்ளது. காற்றாலையில் 2000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தாண்டு மின்துறைக்கு நஷ்டம் கொஞ்சம் அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் என்பதால் மின்வாரியம் மூலம் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழையால் மின்வாரியத்திற்கு பாதிப்பில்லை. இருந்த போதிலும் தேவையான மின்கம்பங்கள், உபகரணங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.  டாஸ்மாக்கில் வசூலாகும் பணத்தை, வங்கிகளே நேரடியாக வந்து பெற்றுச்செல்ல வேண்டுமென டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பங்கேற்றது. அதிக தொகை கேட்டதால் மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Tags : Thangamani ,recession , Power, Minister Thangamani
× RELATED உயிர் பலி இல்லாத மின்சார வாரியத்தை...