×

அதிமுகவில் வெற்றிடம் எங்கே உள்ளது சினிமாவில் இருந்து வருபவர்கள் ஆட்சியை பிடிக்க முடியாது: நடிகர் ரஜினிக்கு முதல்வர் எடப்பாடி பதில்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். இதையடுத்து, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்  விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே நேற்று நடந்தது.  விழுப்புரம் மாவட்ட செயலாளர் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். குமரகுரு எம்எல்ஏ துவக்க உரையாற்றினார்.  முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்றார். இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:கட்சியை துவக்கியவுடனே வெற்றி பெற முடியாது. 68 ஆண்டுகாலம் வேறு துறையில் இருந்துவிட்டு, திடீரென கட்சி ஆரம்பித்து அரசியலில் வென்றுவிடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். திடீர் பிரவேசம் செய்து ஆட்சியை பிடிக்க முடியாது. மக்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல; யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்; ஆட்சியை பிடிக்க  நினைக்கலாம். அதேநேரத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரும்.

திரைப்படத்துறையில் இருந்த எம்.ஜி.ஆர். எம்.எல்.ஏ.வாக இருந்து பல ஆண்டுகாலம்  மக்களுக்காக பணியாற்றினார்.  இவர், மக்களுக்கு நன்மை செய்யவும், அண்ணாவின் கனவை நனவாக்கவும் அதிமுகவை உருவாக்கினார். எம்.ஜி.ஆரை தவிர  திரைத்துறையில் இருந்து திடீரென அரசியலில் நுழைந்து  ஆட்சியை பிடிக்க முடியாது. அவரை பின்பற்றி வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். சிலரை போல வீட்டில் இருந்து பேட்டிக்கொடுத்து அரசியல் செய்தவர் அல்ல. களத்துக்கு நேரடியாக வந்து மக்களை சந்தித்து, அதற்காக உழைத்து உழைப்பால்  அதிமுகவை உயர்த்தினார். எத்தனையோ பேர் இப்படி சொல்லிக்கொண்டு பின்னர் காணாமல் போய்விட்டனர். எங்களுடைய கூட்டணி பலமானது.  இந்த வெற்றியை போல 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி எப்போதும் வெற்றி பெறும். அதிமுகவில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளதாக  சிலர் கூறி வருகின்றனர். இந்த இடம் இப்போது எங்கே இருக்கிறது.  இவ்வாறு பழனிசாமி பேசினார்.



Tags : AIADMK , Athimukha, Cinema, Actor Rajini, CM Edappadi
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...