×

சத்தி அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு1000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: 70 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி-பள்ளிக்கு விடுமுறை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் விவசாய விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் வினாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாசனப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். வாய்க்காலில் இருகரைகளை தொட்டபடி நீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சத்தியமங்கலம் அடுத்துள்ள மில்மேடு பகுதியில் உள்ள சுள்ளித்தோட்டம் என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலின் இடதுபுற கரை உடைந்து, தண்ணீர் அருகே உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்தது. இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், பவானிசாகர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தினர். எனினும் உடைப்பு காரணமாக வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள சுள்ளித்தோட்டம், கேத்தம்பாளையம், சின்னபீளமேடு, தட்டாம்புதூர், சுண்டக்காம்பாளையம், நாகரணை கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள பள்ளங்கள் மற்றும் நீரோடைகள் வழியாக ஓடி பவானி ஆற்றுக்கு சென்றது. இதனால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவை பயிரிடப்பட்ட 1000 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. மேலும், 70க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். கேத்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் தண்ணீர் புகுந்ததால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. தண்ணீர் சென்ற பகுதிகளில் உள்ள  மின்கம்பங்கள் விழுந்ததால் நேற்று முன்தினம் மாலை முதல் 10க்கும் மேற்பட்ட  கிராமங்களில் மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக  வளர்ச்சித்துறை அதிகாரிகள் முகாமிட்டு, கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் வைத்து அடுக்கி உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கரை உடைப்பு பகுதியை கலெக்டர் கதிரவன்  பார்வையிட்டார். இதன்பின் அவர் கூறுகையில், ‘‘கீழ்பவானி வாய்க்கால் கரையில் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. கரை உடைந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 2 நாட்களில் கரை உடைப்பு சரி செய்யப்படும். இன்னும் 4 மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடும். பின்னர் மணல் மூட்டைகள் மற்றும் மூங்கில் கழிகளால் கரை உடைப்பு சரிசெய்யப்படும். வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்’’ என்றார்.

சேலத்தில் தரைபாலம் உடைப்பு:  சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால்,  திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெண்ணந்நதூர் அடுத்த  மதியம்பட்டியில் ரசாயன நுரை பொங்கி தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால், வாகன  போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் 4 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் வாழைகள் சேதம்
ஈரோடு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பல பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் தண்ணீர் அதிகமாக சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மொடக்குறிச்சி அருகே கருக்கம்பாளையம், லக்காபுரம், ஆனைக்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரம் வாழைகள் சேதமடைந்துள்ளன. கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வந்த நீரால் வாழை தோட்டத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : drainage ,houses ,Sathi 1000 ,Keezhavani ,Drain , Energy, kilpavani drain shore, crops, school holidays
× RELATED சித்தூரில் வெயில் சுட்டெரித்து வரும்...