×

முதல்வர் எடப்பாடியை தொடர்ந்து 10 நாள் பயணமாக துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா பறந்தார்: ஒரே ஒரு அமைச்சர் வழியனுப்பி வைத்தார்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் பயணமாக நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். விமான நிலையத்துக்கு ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே வந்து வழியனுப்பி வைத்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (8ம் தேதி) முதல் வருகிற 17ம் தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றார். இன்று மாலை சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 17ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை திரும்புகிறார். அவருடன் நிதித் துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், ஓபிஎஸ் மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் ஆகியோர் உடன் சென்றனர்.

முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தனர். மேலும் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. 10 நாள் பயணத்தை முடித்து விட்டு வரும் 18ம் தேதி அதிகாலை ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்புகிறார். நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சில அமைச்சர்கள் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று வாழ்த்தினர். ஆனால் நேற்று விமான நிலையத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜு மட்டுமே வந்து வழியனுப்பி வைத்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை வழியனுப்ப, விமான நிலையத்துக்கு மற்ற அமைச்சர்கள் வராதது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா செல்லும் துணை முதல்வர், தமிழ்நாட்டிற்கான புதிய திட்டங்களுக்கு  தேவையான நிதிகள் பெறுவது குறித்து அமெரிக்காவில் உள்ள உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர்  அலுவலர்களுடன் விவாதிக்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள்  திரட்டுவது குறித்து இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்பரேஷன் மற்றும் முக்கிய  நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திக்கிறார்.  வீட்டுவசதி மற்றும்  நகர்புற வளர்ச்சி துறை சார்ந்த திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். சிகாகோ  நகரில் உள்ள முக்கிய தொழில் முனைவோர்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய  அழைப்பு விடுத்தல், சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள்  தின நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் இங்கிலாந்து, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Tags : minister ,OBS America ,Edappady ,journey ,OPS America ,Chief Minister ,Edappadi , Chief Minister Edappadi, Deputy Chief Minister OPS, USA
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...