×

வட சென்னையில் மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் எதிரொலி சிறுவர்கள் பட்டம் பறக்க விட்டால் பெற்றோர் கைது

சென்னை: தண்டையார்பேட்டை அருகே கடந்த 3ம் தேதி 3 வயது சிறுவனின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். நேற்று முன்தினம் புளியந்தோப்பில் ராஜசேகரன் என்பவர் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கியதில் காயமடைந்தார். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சிறுவர்களிடையே காற்றாடி விடுவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று காலை புளியந்தோப்பு கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் அருகே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் பட்டம் மற்றும் மாஞ்சா நூலால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி எடுத்துரைத்தனர். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

மேலும், 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள் புளியந்தோப்பு பகுதியில் பட்டம் விடுவது அதிகமாகி வருவதால் இனி 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பட்டம் விட பெற்றோர்கள் அனுமதித்தால் பெற்றோர்களை கைது செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், புளியந்தோப்பு பகுதிகளான புளியந்தோப்பு ஹைரோடு, கன்னிகாபுரம், ஆடுதொட்டி, பி.எஸ்.மூர்த்தி நகர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தெருக்கள் வழியாக போலீசார் ஒலிபெருக்கி வைத்து வீதி வீதியாக சென்று அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பட்டம் விடுவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

‘100க்கு டயல் பண்ணுங்க’


பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே உள்ள பூங்காவில் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் பட்டம் விடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்தர், செம்பியம் ஆய்வாளர் ஜெகன்நாதன் ஆகியோர் விளக்கிக் கூறினர். ‘எந்த பகுதியில் பட்டம் பறப்பதை பார்த்தாலும் நம்பர் 100 அழுத்தி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சொல்லலாம்’ என அவர்கள் தெரிவித்தனர்.


Tags : Parents ,children ,death ,Chennai ,deaths , Parents arrested,boys' deaths
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...