×

விளைச்சல் பாதிப்பு எதிரொலி வெங்காயம் விலை மீண்டும் கடும் உயர்வு: உருளை, கேரட், பீட்ரூட், கீரை விலையும் எகிறியது

சென்னை: விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், கீரை உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.   சென்னை கோயம்பேடு மொத்த  மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில்  இருந்து வெங்காயம் வருகிறது. தினமும் 80 லாரிகளில் வெங்காயம் வருவது வழக்கம். இந்த ஆண்டு மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வரலாறு காணாத மழையால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் வெங்காயம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்து வருகிறது. மழையால் காய்கறி விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறி விலையும் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: இந்த ஆண்டு மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஒரே நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது.

இதனால், இரண்டு மாநிலங்களிலும் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் பாதிப்பால் தற்போது கோயம்பேட்டிற்கு வெறும் 50 லாரிகளில்தான் வெங்காயம் வருகிறது. . இதனால் வெங்காயம் விலை உயர தொடங்கியுள்ளது.
அதாவது, பெல்லாரி (பெரிய வெங்காயம்) கிலோ ரூ.30லிருந்து ரூ.60, சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) ரூ.40லிருந்து ரூ.60க்கும் விற்கப்படுகிறது. இதேபோல, காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. கேரட் ரூ.60லிருந்து ரூ.65, பீட்ரூட், நூக்கல் ரூ.15, ரூ.20க்கு விற்கப்பட்டது தற்போது இது ரூ.40க்கு விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு ரூ.15லிருந்து ரூ.25, முருங்கைக்காய் ரூ.60லிருந்து ரூ.100, 120க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மல்லி, புதினா விலை கடுமையாக அதிகரித்து வந்தது. இது தற்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. மல்லி (அரை கிலோ) ரூ.40லிருந்து ரூ20, புதினா ரூ.40லிருந்து ரூ.20, ரூ.25க்கு விற்கப்படுகிறது.

அரைக் கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, முருங்கை கீரை, பருப்பு கீரை, முளைக்கீரை என அனைத்து கீரைகளும் ரூ.7க்கு விற்கப்பட்டது. இது தற்போது ரூ.15க்கு விற்கப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார். இந்த விலை உயர்வு என்பது மொத்த மார்க்கெட்டில்தான். ஆனால் சில்லரை மார்க்கெட்டில் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை அதிகமாக விற்கப்படுகிறது. அதேபோல, காய்கறி விலையும் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமாக விற்கப்படுகிறது. இது, இல்லத்தரசிகளை மட்டுமின்றி, ஓட்டல், சிறிய டிபன் கடைகள் நடத்துபவர்கள் உள்ளிட்ட பலரையும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கூடுதல் செலவு
சாம்பார் மற்றும் அனைத்து வகை குழம்புகள், பொரியல், கூட்டு போன்றவற்றில் வெங்காயம் என்பது முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. இவற்றின் சுவையை கூட்டும் சக்தியாக வெங்காயம் இருந்து வருகிறது. தவிர்க்க முடியாத பொருளாக இருப்பதால் வெங்காயம் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Yields, onions, potatoes, carrots, beetroot, lettuce
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...