×

4வது நாளாக டெல்லியை மிஞ்சிய காற்று மாசு ஆபத்தான நகரமாக மாறுகிறதா சென்னை? வறண்ட வானிலையால் அதிகரிப்பு ,.. மழை பெய்தால் மட்டுமே குறைய வாய்ப்பு

சென்னை: தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசு டெல்லியை மிஞ்சி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி ஆபத்தான நகரமாக சென்னை மாறி வருகிறது. வறண்ட வானிலை காரணமாக நாளை வரை காற்று மாசு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், மழை பெய்தால் மட்டுமே குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் பிஎம்2.5ன் அளவு ஆபத்தான முறையில் உயர்ந்துள்ளது என்பதை காற்றின் தரக்குறியீடு காட்டுகிறது. டெல்லியை விட சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், நேற்றுடன் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 48 புள்ளிகள் அளவிற்கு காற்று மாசு உயர்ந்துள்ளதாக ஆய்வில் திடுக்‍கிடும் தகவல் வெளியாகியுள்ளது.  காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு பிஎம் 10, பிஎம் 2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம் 2.5ன் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று முன்தினம் காற்றில் மிதக்கும் நுண்துகள் அளவு 254 மைக்ரோ கிராமமாக இருந்த நிலையில், சென்னையில் 264 மைக்ரோ கிராம் இருந்தது.

குறிப்பாக, வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணா நகரில் சராசரி காற்றுமாசு 341 தரக்குறியீடாக இருந்தது. சென்னையில் வறண்ட வானிலை நிலவி வருவதால் நாளை வரை காற்றுமாசு அதிகரித்தே காணப்படும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.  அவ்வாறு மழை தொடங்கும்பட்சத்தில் காற்று மாசு குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி சென்னையில் சராசரியாக காற்று மாசு 288 தரக்குறியீடு ஆக உள்ளதாக காற்று தர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசு நீடித்து வருவது உறுதியாகியுள்ளது. அதேநேரம் சென்னையின் முக்கிய பகுதிகளில் காற்று மாசு டெல்லியை மிஞ்சி இருப்பதால் நோயாளிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டனர்.

டெல்லியில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு தரக்குறியீடு 330ஆக இருந்தது. அதே நேரம் சென்னையில் ஆலந்தூரில் தரக்குறியீடு 301 ஆகவும், மணலியில் 342 ஆகவும், மணலி கிராமத்தில் 221 ஆகவும், வேளச்சேரியில் 307 ஆகவும் காற்று தரக்குறியீடு உள்ளது. இந்த சூழ்நிலையில் வறண்ட வானிலை காரணமாக காற்று மாசு அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியை மிஞ்சும் அளவுக்கு சென்னையில் காற்று அளவு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆபத்தான நகரமாக மாறி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Delhi ,city , Delhi, Air Pollution, Chennai, Rain
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு