×

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஐஎன்எஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதே போல், அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள நிதி மோசடி வழக்கிலும் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு நீதிபதி சுரேஷ் கெய்ட் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ப.சிதம்பரத்திற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. இது சிபிஐ.யின் ஊழல் வழக்கு போன்றதல்ல. மிக மிக தீவிரமானது.  

சிதம்பரத்திற்கு ஜாமீன் தந்தால் அவர் சாட்சிகளை கலைக்கக் கூடும் அல்லது மிரட்டக்கூடும். நாங்கள் 3 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பினோம். அதில் 2 பேர் வரவில்லை. ஒருவர், கைப்பட எழுதப்பட்ட கடிதத்தை வாக்குமூலமாக அனுப்பி உள்ளார். நேரில் ஆஜராக பயமாக இருப்பதாக அவர் கூறி உள்ளார். இப்போது வரை சாட்சிகளை கலைக்கவும், ஆவணங்களை அழிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது,’’ என்றார். இதற்கு சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், ‘‘எல்லா ஆதாரங்களும் ஆவணங்களாக அமலாக்கத்துறை பாதுகாப்பில் உள்ளது. அதை நாங்கள் எப்படி அழிக்க முடியும்? இதற்கு முன் சாட்சிகளை கலைத்து முயற்சித்தது பற்றி எல்லாம் அரசு தரப்பு பேசாமல், திடீரென இப்போது கூறுவது ஏன்?’’ என்றார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுரேஷ் கெய்ட், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags : Postponement of judgment, INX abuse case
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...