×

5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்ததை அடுத்து தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா : மகாராஷ்ராவில் புதிய ஆட்சி எப்போது?

மும்பை : மகாராஷ்டிராவில் புதிய ஆட்சியமைப்பது தொடர்பாக சிவசேனாவுடன் உடன்பாடு எட்டப்படாததால், முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் நேற்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றன. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா-சிவசேனாவுக்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை சிவசேனா பிடிவாதமாக வலியுறுத்தி வருவதை பா.ஜனதா ஏற்க மறுத்து வருவதால், தேர்தல் முடிவு வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாகியும் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்தது. தனிப்பெரும் கட்சியாக இருந்த போதிலும் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோராமல் பா.ஜனதா மவுனம் சாதிக்கிறது. 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து விட்டதால்நேற்்று ஆளுநரை சந்தித்து  பட்நவிஸ் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.  

ஆளுநர், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக பதவியில் நீடிக்கும்படி பட்நவிசிடம் கேட்டுக் கொண்டார். பின்னர், பட்நவிஸ் அளித்த பேட்டியில், ‘‘இரு கட்சிகளுக்கும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி என உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதாக சிவசேனா கூறுகிறது. ஆனால், முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எனது முன்னிலையில் எந்தவிதமான உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை. இதனை பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டனர். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக நீடிக்குமாறு ஆளுநர் என்னிடம் கேட்டுக் கொண்டார். விரைவில் பாஜ - சிவசேனா கூட்டணி உறுதியானால், புதிய அரசு பதவியேற்கலாம் ; இல்லையேல், ஜனாதிபதி ஆட்சி அமலாகலாம்.

என்னை பொய்யராக சித்தரிக்க முயற்சி

பட்நவிஸ் தனது  முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், ‘‘சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என்று எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று  பட்நவிஸ் கூறியது முற்றிலும் தவறானது. என்னை ஒரு பொய்யராக சித்தரிக்க பா.ஜனதாவினரும், பட்நவிசும் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்கள். இது எனக்கு வேதனை அளிக்கிறது. சிவசேனாவை சேர்ந்தவரை முதல்வராக்க வேண்டும் என்று மறைந்த பால் தாக்கரே என்னிடம் வாக்குறுதி பெற்றார். அதை நிறைவேற்றவே பாடுபடுகிறேன்,’’ என்றார்.

Tags : Devendra Patnavis ,regime ,Maharashtra , Devendra Patnavis resigns, five-year term:
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...