பல ஆண்டாக விசாரணை நடந்து வந்த அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு விவரத்தை வெளியிடுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லாலா அமைப்பினர் சரிசமமாக பிரித்துக் கொள்ள தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இப்பிரச்னையை தீர்த்து வைக்க நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 4 மாதங்களாக இந்த குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள் தோறும் விசாரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வரும் 17ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.  இதனால் எந்த நேரத்திலும் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.   

அனைத்து முன்னேற்பாடுகளும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் போலீஸ் டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில், இரு அதிகாரிகளும் நேற்று டெல்லியில் தலைமை நீதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். இதில், அரசின் முக்கிய துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி நிர்வாகிகளுடன் அந்தந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்களை கேட்டறிந்தார்.

இப்படிப்பட்ட நிலையில், அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றம் நேற்றிரவு திடீரென அறிவித்தது. இன்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு விவரத்தை வெளியிட இருப்பதாக உச்ச நீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் 5 பேரும் தனித்தனியாக அவர்களது தீர்ப்பை வெளியிடுவர். இதனால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை நாடே பெரிதும் எதிர்பார்த்துள்ளது. பிரதமர் மோடி ட்விட்: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு தகவல் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை பொறுத்தவரை யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல. எனவே, நாம் அனைவரும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தயார் நிலையில் 2 ஹெலிகாப்டர்கள்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக செய்யப்பட்டிருக்க வேண்டுமென யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவசரகால தேவைக்காக லக்னோவில் 2 ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைப்பதென்றும், மாநில அளவில் லக்னோவில் கட்டுப்பாட்டு மையமும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக கட்டுப்பாட்டு அறைகளும் அமைத்து தீவிரமாக கண்காணிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>