×

மருதாநதி அணையிலிருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

பட்டிவீரன்பட்டி: மருதாநதி அணையிலிருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணை 72 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் முக்கிய பிரதான வாய்க்காலின் அருகில் இடது மற்றும் வலது பிரதான வாய்க்கால்கள் உள்ளன. வலது பிரதான வாய்க்கால் தெற்கு வாய்க்கால் என்றும், இடது பிரதான வாய்க்கால் வடக்கு வாய்க்கால் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தெற்கு வாய்க்கால் 9.86 கி.மீ., வடக்கு வாய்க்கால்  10.05 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த இரண்டு வாய்க்கால் மூலம் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆனால் இந்த இரண்டு வாய்க்கால்களிலும் தண்ணீர் வந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. செடி, கொடிகள் வளர்ந்து வாய்கால்கள் புதர்மண்டி காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் சேதமடைந்த. வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நீர், நிலவள திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்தில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. அணையில் தற்போது 70 அடி தண்ணீர் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 40 கனஅடி வீதம் தண்ணீர் பிரதான வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. தற்போது பிரதான வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் முதல்போக சாகுபடிக்காக அணை திறந்து விடப்பட உள்ளது. பிரதான வாய்க்காலோடு து வடக்கு மற்றும் தெற்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சித்தரேவு முன்னாள் ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணி கூறுகையில், இந்த வாய்க்காலை சீரமைத்த சமயத்தில் முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் முயற்சியால் 2 நாட்கள் மட்டும் தண்ணீர் வந்தது. கடந்த கிராமசபை கூட்டத்திலும் வடக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் இந்த பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். தற்போது தண்ணீர் வாராத காரணத்தினால் இந்த வாய்க்கால்கள் புதர்மண்டி கிடக்கின்றன. மருதாநதி அணையிலிருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Marudhanadi Dam ,tributaries ,Marudanathi Dam , Marudanathi Dam
× RELATED அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு