×

நாட்டிலேயே நீதித்துறை சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை: நாட்டிலேயே, நீதித்துறை, சிறப்பாக செயல்படும் மாநிலங்களில், தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக, வழக்குகளை கையாண்டு, அதனை விசாரித்து, நீதி வழங்குவதில், மூன்றாம் இடம் மட்டுமே கிடைத்துள்ளது. டாடா நிறுவனத்தின் அறக்கட்டளை, பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு நடத்தி வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல், காவல்துறை, சிறைத்துறை மற்றும் தடயவியல்துறைகளின் செயல்பாடு, நீதி வழங்குதல், சட்ட உதவி, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளில், யார், யார் எந்தெந்த இடத்தைப் பிடித்துள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடைபெற்றது.

இதில், எந்தப் பிரிவிலும் முதலிடத்தைப் பெறாத மகாராஷ்டிரா, ஒட்டுமொத்த சராசரி கணக்கின்படி அடிப்படையில், முதலிடம் பிடித்திருக்கிறது. ஆனால், அனைத்து பிரிவுகளிலும், தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் இடையே முதலிடத்தைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவியுள்ளது. குறிப்பாக, குறைவில்லாத நீதிபதிகள் எண்ணிக்கை, வழக்குகளின் மீதான தீர்வு, நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உள்ளடக்கிய நீதித்துறை சார்ந்த செயல்பாடுகளில் , 70 விழுக்காட்டிற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்று தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது. இதேபோன்று, காவல்துறையை நவீனப்படுத்துவது, மகளிர் பங்களிப்பை அதிகரிப்பது, நிதி ஒதுக்கீடு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய, காவல்துறை பிரிவுகளின் செயல்பாடுகளிலும், தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.


Tags : states ,Tamil Nadu ,country , Country, Justice, State, Tamil Nadu tops the list
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து