×

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்: ஆட்சி பங்கீடு குறித்து சிவசேனாவுடன் எந்த உடன்பாடும் செய்யவில்லை என பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது, மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தற்காலிக முதல்வராக நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்காலிக முதல்வராக அவர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் 13வது சட்டப்பேரவையின் பதிவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. அரசியலைப்பு சட்டப்படி, சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆனால் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் பனிப்போரால் மகாராஷ்டிரா அரசியலில் சிக்கல் உருவாகியுள்ளது. ஆட்சியமைப்பதற்கான கெடு முடிவடைய இன்னும் சில மணி நேரமே எஞ்சி இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. சிவசேனாவை அமைதிப்படுத்த தூதுவர் ஒருவரை பாஜக அனுப்பிய நிலையில், நிதின் கட்கரி உத்தவ் தாக்கரே-வை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம், சிவசேனாவின் ஆதரவு இல்லாமலேயே தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் சிறுபான்மை அரசாக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை பாஜ செய்து வருகிறது.

இந்த நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே-வை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி இன்று சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த நிதின் கட்கரி கூறியதாவது, மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக,சிவசேனை இடையே சமரச பேச்சு நடத்த தயார் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிவசேனை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு நிதின் கட்கரி மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் சிவசேனை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும் பாஜக மூத்தத் தலைவர் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், இன்று மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை தேவேந்திர பட்னாவிஸ் அளித்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி:

ராஜினாமா கடித்ததை வழங்கியபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேசுவதற்கு மட்டும் நேரமுள்ளது. ஆனால் பாஜகவுடன் ஆலோசிக்க நேரமில்லை என புகார் கூறினார். மேலும் கடந்த காலங்களில் பலமுறை சிவசேனா கட்சி தங்களை அவமானப்படுத்தி உள்ளதாக பட்னாவிஸ் குற்றம் சாட்டினார். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பற்றி சிவசேனா கட்சியினர் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். அதேபோல் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டு சிவசேனா கட்சிக்கு வழங்குவதாக ஒருபோதும் தாம் கூறவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் சமபங்கு என்பது குறித்து தனது முன்னிலையில் சிவசேனா எந்த ஆலோசனையும் நடத்தவிலை என்றும் எந்த உடன்படும் செய்யவில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆட்சி அமைப்பது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவருடன் பேச முடியவில்லை என பட்னாவிஸ் தெரிவித்துளளார்.

Tags : Devendra Patnais ,Shiv Sena ,Devendra Patnavis ,CM , Devendra Patnais, Chief Minister, Resignation, Governance, Partnership, Maharashtra, Interview
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை