மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மந்தம்

*போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் பொதுமக்கள்.

 மதுரை : மதுரை நகரில் ரூ.323 கோடியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பலவேறு பணிகள் மந்தமாக நடந்து வருவதால், நகருக்குள் வாகன போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி பொதுமக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். மதுரை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.159.70 கோடி மதிப்பீட்டில் பெரியார் பஸ் நிலையம் மறுசீரமைப்பு, இதன் அருகே ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகள் மையம், ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் நேதாஜி ரோட்டில் உள்ள ஜான்சிராணி பூங்காவில் புராதன வர்த்தக கூடம் பணிகள் நடந்து வருகிறது.

மேலும், மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் ரூ.15.24 கோடியில் தளம் மேம்படுத்துதல், அதன் அருகே உள்ள மீனாட்சி பூங்கா மேம்படுத்துதல், புது மண்டபத்தில் உள்ள கடைகளை மாற்றி குன்னத்தூர் சத்திரத்தில் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுதல், வடக்கு ஆவணி மூலவீதியில் ரூ.40.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல அடுக்கு வாகன நிறுத்தம் ஆகிய பணிகளும் நடந்து வருகிறது. இதுதவிர, வைகை ஆற்றில் இரு கரைகளிலும், ரூ.81.41 கோடி மதிப்பீட்டில் ஆற்று முகப்பு மேம்பாட்டு பணிகள், ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன் சாலை வரை ஆற்றின் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டுதல். திருமலை நாயக்கர் மகாலில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் பூங்காவை மேம்படுத்துதல் என மொத்தமாக ரூ.323.29 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகள் துவங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் அனைத்து பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. காளவாசலில் பொதுப்பணித்துறை மூலம் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை, கடந்த அக்.12ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால் பணிகள் நிறைவடையாமல், மந்த நிலையிலேயே நடந்து வருகிறது. இப்படி மதுரையில் நடைபெறும் பல்வேறு பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படவில்லை. இதனால், வாகன ஒட்டிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பல ரோடுகள் வழியாக சுற்றி செல்ல வேண்டி உள்ளது. ஆற்றில் இருபுற கரைகளிலும் தடுப்பு சுவர், ஆற்று சாலை விரிவாக்க செய்வதாக கூறி, ஆரப்பாளையம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்று தென்கரை ரோட்டை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்தப்படுத்த முடியவில்லை.

பெரியார் பஸ் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகளால் பல கிராமங்களுக்கு செல்லும் நகர பஸ்கள் டிபிகே ரோட்டில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் டிபிகே ரோடு முழுவதும் தூசி படர்ந்து, எப்போதுமே புழுதி பறக்கிறது. டூவிலரில் செல்வோர் புழுதியால் சுவாசிக்க முடியாமல் திணறுகின்றனர். சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. அந்த பகுதி புகை மண்டலமாக எப்போதும் காட்சி தருகிறது.

* மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் கண. முனியசாமி கூறும்போது, ‘‘மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் ஓரே நேரத்தில் நடப்பதால், அந்த பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படவில்லை. காளவாசல் மேம்பால பணிகள் முடிக்கப்படாததால், பைபாஸ் ரோட்டில் சரிவர வாகனங்கள் செல்ல முடியவில்லை. அதே போன்று பெரியார் பஸ் நிலையம் மறுசீரமைப்பு பணிகளும் மிக மந்தகதியில் நடந்து வருகிறது.

இதனால் பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள ரோட்டை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வைகை ஆற்று ரோடு விரிவாக்கத்தால், அந்த இருகரை ரோடுகளையும் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. ஏற்கனவே மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இந்நிலையில், இப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பது, நகரின் பல இடங்களில் வாகன நெரிசலை ஏற்படுத்தி, பொதுமக்கள் தவிக்க வைக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’’ என்றார்.

Related Stories:

>