×

குளத்தூர் அருகே நீர்வழி ஓடையில் கட்டிய தடுப்பணைகள் ஒரு மாதத்தில் சேதம்

குளத்தூர் : குளத்தூர் அருகே நீர்வழி ஓடையில் கட்டப்பட்ட தடுப்பணைகள் ஒரு மாதத்தில் சேதமடைந்தன. குளத்தூர் அருகே உள்ள முத்துக்குமாரபுரம் சப்பளை சேனல் பகுதியில் இருந்து வேப்பலோடை கண்மாய் மற்றும் அதிலிருந்து பிரிந்து குளத்தூர் தெற்கு கண்மாய்களுக்கு செல்லும் நீர்வழி ஓடைகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு என்ஆர்ஜிஎஸ் திட்டத்தின் கீழ் கற்கள் அடுக்கி வலையால் பின்னப்பட்ட இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டன.  அப்போது இப்பகுதி விவசாயிகள் இந்த இரு அணைகளால் அப்பகுதி விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும், இதனால் எந்த பயனும் இல்லை. இதை உடனே அகற்றி நீர்வழி ஓடைகளை தூர்வாரினால் போதும்.


மேலும் அணை கட்ட வேண்டிய முத்துக்குமாரபுரம் சப்பளை சேனல் பகுதியில் தடுப்பணைகளை கட்ட கோரி விவசாயிகள் கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையில் நீர்வழி ஓடையில் தண்ணீரின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் தடுப்பணைகள் சிதைந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும் இதில் சிதைந்த கற்களை இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடத்தி செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: முத்துக்குமாரபுரம் சப்பளை சேனல் பகுதியிலிருந்து வேப்பலோடை கண்மாய் மற்றும் அதிலிருந்து பிரிந்து குளத்தூர் தெற்கு கண்மாய்களுக்கு செல்லும் நீர்வழி ஓடைகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரு தடுப்பணைகள் கட்டப்பட்டன. அப்போதே தடுப்பணைகள் தேவை இல்லை, நீர்வழி ஓடைகளை மட்டும் தூர் வாருங்கள் என கூறினோம். அதைவிடுத்து கிராமம் கிராமமாக எதற்கும் உதவாத இதுபோன்ற பயனற்ற தடுப்பணைகளை கட்டி பணம் சம்பாதிப்பதிலேயே அதிகாரிகள் குறியாக இருந்தனர். தற்போது பெய்த மழையால் அவைகள் சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


Tags : waterway ,Klathoor ,Kolathur , kolathur ,Waterway stream,Dams ,one month ,Damaged condition
× RELATED செங்கல்பட்டு அருகே அறுவடை செய்ய நெல்...