வள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கு பாஜக சாயம் பூச முயற்சி; தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது : ரஜினி பரபரப்பு பேட்டி

சென்னை: திருவள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச முயற்சிகள் நடைபெறுவதாக நடிகர் ரஜினிகாந்த் குற்றம் சாட்டினார். இதில் நானும், திருவள்ளுவரும் சிக்க மாட்டோம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்த ரஜினிகாந்த், எனக்கு சிறப்பு விருது அறிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடும் எண்ணமில்லை என்று ரஜினி தெரிவித்தார். பாஜகவில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும், திருவள்ளுவர் நாத்திகர் அல்ல; ஆத்திகர்; கடவுள் நம்பிக்கை இருந்தவர் என்று தெரிவித்தார்.

திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதம், சாதிக்கு அப்பாற்பட்டவர் என்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தெரிவித்தார். திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியலாக்குவது தேவையற்றது என்றும் தெரிவித்தார். முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், மணிரத்னம், வைரமுத்து, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரஜினி மீண்டும் பேட்டி

அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். எப்போதும் வெளிப்படையாக தான் பேசுகிறேன் என்றும், பொருளாதார மந்தநிலையை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழக அரசியலில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்றும், அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவியேற்கும் வரை திரைப்படங்களில் நடித்ததாகவும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். 

Related Stories:

>