×

இளைஞர்களின் இடைவிடாத முயற்சியால் 26 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் குளங்கள்

*காவல்கிணறு சுற்றுவட்டார விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

பணகுடி : காவல்கிணறு பகுதி இளைஞர்களின் இடைவிடாத முயற்சியால் 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் உள்ள 3 குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் 600 ஏக்கரில் விவசாய பணிகள் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ளது காவல்கிணறு. கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் இல்லாத வறண்ட பகுதி என்றழைக்கப்படும் அளவிற்கு இருந்து வந்தது. இந்நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்க காவல்கிணறை சேர்ந்த ராமராஜன், பொன்னுதுரை, கிறிஸ்டோபர், அருள்ரூபர்ட், விதுபாலா உள்ளிட்ட இளைஞர்களும், பெரியவர்களும் இணைந்து நீர்நிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை துவக்கினர்.

நிலத்தடி நீரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை இவ்வமைப்பினர் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இவர்களே களமிறங்கினர். முதற்கட்டமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும் விலக்கு பகுதியில் உள்ள பூ வணிக வளாகத்தில் இருந்து வரத்து கால்வாய்களை சீரமைத்தனர். இதன் காரணமாக கடந்தாண்டு முதல் காவல்கிணறு பகுதியில் உள்ள விநாயகர் புதுக்குளம், மணிமாலை புதுக்குளம், பெருமாள் புதுக்குளம் ஆகியவற்றிற்கு நீர்வரத்து துவங்கியது.

இந்தாண்டு விநாயகர் புதுக்குளம் நிரம்பி ததும்புகிறது. மறுகால் பாய்ந்து மணிமாலை புதுக்குளம், பெருமாள்புதுக்குளத்துக்கும் நீர்வரத்து துவங்கியுள்ளது. சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த 3 குளங்களும் ஒரே நேரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து நீர்நிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ராமராஜன் கூறுகையில், எங்கள் பகுதியில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கவே 100க்கும் மேற்பட்ட குடங்கள் காத்துக்கிடக்கும்.

ஊராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால் குடிநீர் தட்டுப்பாடு என்ற பதில்தான் வரும். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பை துவக்கி சொந்த பணத்தை செலவிட்டு குளங்களுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுத்துள்ளோம். குளங்களும் பெருகத் துவங்கியுள்ளன. பலவீனமான குளக்கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி உள்ளோம். கால்வாயில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பணைப்போல் ஏற்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் அடுத்தடுத்த குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்த 3 குளங்கள் மூலம் 600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இனி தண்ணீர் பஞ்சம் என்ற நிலை ஏற்படாதவாறு நீர்நிலைகளை பாதுகாக்க தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம், என்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு 3 குளங்கள் நிரம்பி வருவது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : kaavalkinaru ,youngsters ,lake ,Panakudi , kaavalkinaru,Panakudi ,lake ,youngsters
× RELATED புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு...