×

புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததை கண்டித்து பெண்கள் மறியல்

* மனு கொடுத்தால் விரட்டியடிப்பு „ *அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு

பெரம்பூர்: புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெளிநாடுகளை போன்று சென்னை மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தி.நகர் பகுதியில் தரமான சாலை, அகலமான  நடைபாதை, வடிகால், மின்விளக்கு, பார்க்கிங் வசதி உள்ளிட்டவை பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.உயர்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்று வரை சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய் மற்றும் கழிப்பறை  உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.  குறிப்பாக, அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிப்பறை வசதியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக புளியந்தோப்பு காந்திநகர் பகுதி உள்ளது. 4912 பேர் வசிக்கும் இப்பகுதியில் ஒரே ஒரு பொது கழிப்பறை  மட்டுமே உள்ளதால், இயற்கை உபாதைகளை கழிக்க தினசரி இப்பகுதி மக்கள் பல இன்னல்களை சந்திக்கும் நிலை உள்ளது.சென்னை மாநகராட்சி, 6வது மண்டலம், 73வது வார்டுக்கு உட்பட்ட புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் 1968ம் ஆண்டு அண்ணா ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அப்போது, இங்கு 301 வீடுகள்  பொதுமக்களுக்கு கட்டித்தரப்பட்டன. அதன்பின் மக்கள் தொகை அதிகரிப்பால், தற்போது அங்கு 517 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இங்கு 4912 பேர் வசித்து வருகின்றனர்,இவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் ஒரே ஒரு பொது கழிப்பறை மட்டுமே கட்டித் தரப்பட்டுள்ளது. இங்கு, ஆண்களுக்கு 4 கழிப்பிடமும், பெண்களுக்கு 3 கழிப்பிடமும் மட்டுமே உள்ளதால், தினசரி காலை  நேரங்களில் பொதுமக்கள் காலை கடன்களை முடிக்க வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.  

இதற்கு அடுத்தபடியாக 72வது வார்டுக்கு உட்பட்ட டிக்காஸ் சாலையில் மட்டுமே மாநகராட்சி கழிப்பறை உள்ளதால், அப்பகுதி மக்கள் அவசரத்துக்கு புளியந்தோப்பு ஆர்டிஓ அலுவலகத்தின் பக்கத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தை  பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சுகாதார கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தங்களது பகுதிக்கு கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டாக  மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, அடிக்கடி மழை பெய்து வருவதால், மேற்கண்ட திறந்தவெளி மைதானத்தையும் பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபற்றி மண்டல அதிகாரிகளிடம் முறையிட்டபோது, முறையான  பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனவே, ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்து நேற்று புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை கலைந்து  செல்லும்படி கூறினர். இதையேற்று பெண்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது:4912 பேர் வசிக்கும் இப்பகுதியில் அரசு ஒரே ஒரு பொது கழிப்பறை மட்டும் கட்டி கொடுத்துள்ளது. இதனால், தினசரி இயற்கை உபாதைகளை கழிக்க பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறோம். இதனால், பலர் சுகாதாரமற்ற முறையில்  திறந்தவெளியை நாடும் நிலை உள்ளது. இதன் காரணமாக சுகாதார கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இரவில் இந்த மைதானத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்லும்போது, அங்குள்ள குடிமகன்களால்  சிரமப்படும் நிலையும் உள்ளது. திறந்தவெளியில் மலம் கழிப்பது தவறு என, பல லட்சம் ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்யும் அரசு, அந்த பணத்தில் மக்களுக்கு பல கழிவறைகளை கட்டி ெகாடுத்திருக்கலாம். அதை செய்வதில்லை.

சென்னை மாநகராட்சியில் வெளிநாடுகளை போன்று அடிப்படை கட்டமைப்பு வசதி செய்வதாக கூறும் அதிகாரிகள், முதலில் மக்களுக்கு தேவையான கழிவறையை கட்டித்தர வேண்டும். கிளீன் இந்தியா திட்டம் மூலம் கழிவறை  அமைக்கப்படுவதாக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதி எங்கு செல்கிறது, என்ன செய்யப்படுகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை.  கழிப்பறை வசதி கோரி, அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்றால், முறையாக பதிலளிக்காமல், ஏதோ பிச்சைக்காரர்களை விரட்டுவதை போல் விரட்டி அடிக்கின்றனர். அழுதாலும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது, என்பது போல் உள்ளது  ஆட்சியாளர்களின் செயல்பாடு. மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கூட செய்து தரமுடியாத அரசு இருந்து என்ன பயன். இந்த அவலம் என்று மாறுமோ தெரியவில்லை,’’ என்றனர்.      

மாணவன் புலம்பல்
கழிப்பிட வசதி இல்லாததால் பாதிக்கப்பட்ட பள்ளி சிறுவன் கார்த்திக் (12) கூறுகையில், ‘‘நான் தினமும் காலையில் எழுந்து பள்ளிக்கு செல்லும் முன் இங்குள்ள பொது கழிப்பிடத்திற்கு சென்றால், அங்கு வரிசையில் காத்திருக்கும் பெரியோர்,  ‘‘நீ சின்ன பையன் தானே அருகில் உள்ள மைதானத்திற்கு போ,’’ என்று விரட்டுகின்றனர். தற்போது அந்த மைதானம் உள்ள பகுதியிலும் மின் வாரியத்தால் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், அங்கு காலை கடனை கழிக்க முடியாமல், தினமும்  பள்ளிக்கு சென்று, அங்கு காலை கடனை கழித்து வருகிறேன். என்னைப் போன்று இப்பகுதி சிறுவர்கள் பலரும் பள்ளியிலேயே காலை கடன்களை கழிக்கும் நிலை உள்ளது,’’ என வேதனையுடன் தெரிவித்தான்.

திறந்தவெளியில் மலம் கழிப்பது தவறு என பல
லட்சம் செலவு செய்து விளம்பரம்  செய்யும் அரசு, அந்த பணத்தில் மக்களுக்கு பல கழிவறைகளை கட்டி  ெகாடுத்திருக்கலாம். அதை செய்வதில்லை

Tags : Women ,Gandhi Nagar Puliyanthope ,area ,toilet facilities , Gandhi Nagar, Puliyanthope, toilet facilities
× RELATED புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3...