×

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்து கிராமங்களில் வெள்ளம்: பவானிசாகர் அணையில் நீர்திறப்பு நிறுத்தம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக கடந்த ஆகஸ்டு 16ம் தேதி முதல் விநாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாசனப்பகுதி  விவசாயிகள், இந்த நீரை பயன்படுத்தி நெல் பயிரிட்டுள்ளனர்.வாய்க்காலில் 2300 கன அடி நீர் இருகரைகளை தொட்டபடி செல்கிறது. நேற்று மாலை 6 மணியளவில் சத்தியமங்கலம் அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் உள்ள சுள்ளித்தோட்டம்  என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலின் இடதுபுற கரை உடைந்து விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள், பவானிசாகர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. வாய்க்காலில் வெளியேறிய  தண்ணீர்  கேத்தம்பாளையம், தாசநாயக்கன்புதூர், தட்டாம்புதூர் கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து பவானி ஆற்றுக்கு சென்றது. கேத்தம்பாளையம் கிராமத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள 30 வீடுகளிலும், மில்மேடு  கிராமத்தில் 15 வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. வருவாய்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை அருகே உள்ள பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.


Tags : Villages ,dam ,Sathyamangalam Sathyamangalam ,flooding , Sathiyamangalam, Kippavani drain, Flood, Bhawanisagar Dam, Water Supply
× RELATED சாலை வசதி செய்துத்தரகோரி தேனியில் 10 கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்..!!