மோடியின் மோசடியை எதிர்த்து இயக்கம் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைய தீர்மானம் : நல்லகண்ணு, தா.பாண்டியன் பேட்டி

சென்னை : கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் தா.பாண்டியன் கூறினர். நவம்பர் புரட்சியை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செங்கொடியை கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஏற்றினார். இதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன், வீரபாண்டியன், ஏழுமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மோடியின் மோசடியை எதிர்த்து தொடர்ந்து இயக்கங்களாக நடத்துவோம். இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அகில இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில், ‘‘பல சூழ்ச்சிகளை செய்து தமிழகத்திற்கு நெருக்கடியை உண்டாக்க பாஜ முயல்கிறது. இதை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமையையும், கலாச்சாரத்தையும், சமூக உரிமையையும், தமிழ் மொழி, திருக்குறள், சங்க இலக்கியங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சியில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம்’’ என்றார்.

Related Stories: