×

ஐ.டி. துறையில் ஆட்குறைப்பில் ஈடுபட வேண்டாம் : முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை : தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அதிக அளவில்  வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய Connect-2019 மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் துவக்கி வைத்து பேசியதாவது: பல்வேறு நேர்வுகளில் கொள்கைகளை வகுத்தல், வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப முடிவுகளை மேற்கொள்ளுதல், தொழில் வளர்ச்சிக்கு உதவி பொருளாதாரத்தை உயர்த்துதல், பொது மக்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கோப்புகளைக் கையாளுதல் மற்றும் சட்டம் ஒழுங்கினை பராமரித்தல் ஆகியவை ஒரு அரசின் செயல்பாடுகளில் முக்கியமானதாகும்.

ஆளுமையின் ஒவ்வொரு அம்சத்திலும், அதிக அளவில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் பயன்பாடு திறம்பட செயல்படுவதுடன், குடிமக்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் வகையில் பிரமிக்கத்தக்க அளவில் முன்னேறியுள்ளது. அதிக அளவில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும், நுகர்வதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் சேவைகளை வெளிப்படை தன்மையுடன் செம்மையாக பெறும் பொருட்டு, மாநில குடும்ப தகவல் தொகுப்பு ஒன்று உருவாக்கப்படும். “மக்களைத் தேடி அரசு” என்ற திட்டத்தில் சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குடிமக்கள் பெட்டகத்திலிருந்து விண்ணப்பிக்காமல் தானாகவே வழங்கப்படும்
என்ற அறிவிப்புகளை அறிவித்து அதனை செயலாக்கத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் தங்களது எந்த ஒரு தேவைக்காகவும் அரசு அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் இருக்கும் இடத்திலிருந்தே அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறும்.

2018-19ம் ஆண்டில் மென்பொருள் ஏற்றுமதி 1 லட்சத்து 22 ஆயிரத்து 899 கோடி ரூபாயாகும். இதனால் 6 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மென்பொருள் ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்பில் தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் வழிமுறைகள், நிறுவனங்களின் நிதி நிலைமையை சீராக்கம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அதிக அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான கருத்துருக்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு கருத்தியல்கள் குறித்து மாநாட்டில் விரிவாக விவாதித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை மேலும் வளர்வதற்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குங்கள்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில்நுட்பவியல் துறை  செயலாளர் சந்தோஷ்பாபு, சிஐஐ தென்மண்டல தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, சிஐஐ தமிழ்நாடு தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister , IT Do not engage , field slacking,Chief Minister
× RELATED தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று...