×

சட்டப்பேரவை ஆயுட்காலம் இன்று காலாவதியாகிறது மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி?

* புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி
* எந்த கட்சியும் உரிமை கோராததால் குழப்பம்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று காலாவதியாகும் நிலையில், இதுவரை எந்த கட்சியும் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரவில்லை. இதனால், புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு ஆகிய கோரிக்கைகளை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள பாஜ திட்டவட்டமாக மறுத்து விட்டது.
எக்காரணம் கொண்டும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜ தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆகியோர் தேவேந்திர பட்நவிசுக்கும் மகாராஷ்டிரா மாநில பாஜ தலைமைக்கும் உத்தரவிட்டுள்ளனர். பாஜவை பொறுத்தவரை தங்களால் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும் கூட சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியாக உள்ளது.

அதனாலேயே, புதிய அரசு அமைந்தால் அது தேவேந்திர பட்நவிஸ் தலைமையில்தான் அமையும் என்று அந்த கட்சித் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். நேற்று மகாராஷ்டிரா பாஜ தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் அமைச்சர்கள் சுதிர் முங்காந்திவர், கிரிஷ் மகாஜன், ஆஷிஷ் ஷெலார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை ராஜ்பவனில் சந்தித்து பேசினர். ஆளுநரை சந்திக்கும் போது, தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜ தலைவர்கள் ஆளுநரிடம் கோருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஆளுநரிடம் அப்படி எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.ஆளுநரை சந்தித்த பிறகு பேட்டியளித்த சந்திரகாந்த் பாட்டீல், ‘‘சட்டப்பேரவை ஆயுட்காலம் காலாவதியாவதற்கு முன்பு புதிய அரசு பதவியேற்காவிட்டால் அரசியல் சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து ஆளுநருடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்க ஆளுநரிடம் உரிமை கோருவதில் வழக்கத்தைவிட அதிக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய அரசியல் சூழலில் அடுத்து அரசியல் சட்ட ரீதியாக என்ன செய்வது என்பது பற்றி ஆளுநரிடம் கலந்தாலோசித்தோம். எங்கள் கட்சித் தலைவர்கள் மீண்டும் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பார்கள்’’ என்றார்.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் சிறுபான்மை அரசமைக்க பாஜ விரும்பவில்லை என்பதால் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று மற்றொரு பாஜ மூத்த தலைவரான சுதிர் முங்காந்திவர் நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார். சிறுபான்மை அரசாக பதவியேற்க தேவேந்திர பட்நவிசும் விரும்பவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். இன்னொருபுறம், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைக்கவும் இந்த ஆட்சிக்கு காங்கிரசை வெளியில் இருந்து ஆதரவளிக்கச் செய்யவும் சிவசேனா தொடர்ந்து முயற்சித்து வந்ததது. ஆனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சிகளாகவே செயல்படும் என்று சரத் பவார் நேற்று முன்தினம் அறிவித்ததன் மூலம் சிவசேனாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்து என்ன செய்வது எனத்தெரியாமல் அந்த கட்சியும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில்தான் நடப்பு சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் காலாவதியாகிறது. அதனால், இன்றைக்குள் எந்தக் கட்சியோ அல்லது எந்தக் கூட்டணியோ ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோராவிட்டால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரக்கூடும் என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் செய்தி சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதை தான் விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். ஒருவேளை எந்தக் கட்சியும் அல்லது எந்த கூட்டணியும் ஆட்சியமைக்க உரிமை கோராவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘அப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டால் அதற்கென சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளை மீற நான் விரும்வில்லை. அந்த நடைமுறைப்படியே நடந்து கொள்வேன். நவம்பர் 8ம் தேதிக்குள் ஆட்சியமைக்க எந்த கட்சியாவது அல்லது கூட்டணியாவது உரிமை கோர வேண்டும் என நான் விரும்புகிறேன். அவ்வாறு உரிமை கோரிய 24 மணிநேரத்திற்குள் புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்று பதிலளித்தார். மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருவதை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி விரும்பவில்லை என்றாலும், இன்று மாலைக்குள் ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராத பட்சத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதை தவிர வேறு வழியில்லை என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கூவாத்தூர் பாணியில் ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள்

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு பாஜ வலைவீசியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று உத்தவ் தாக்கரே வீட்டில் நடந்த கூட்டத்துக்கு பிறகு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உத்தவ் தாக்கரே வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ரங்சாரதா ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அந்த ஓட்டலில் தங்கியிருப்பார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தவ் வீட்டில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் யாரும் உள்ளே செல்போன் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சதி செய்கிறது பாஜ சிவசேனா குற்றச்சாட்டு

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தன்னால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்று பாஜ அறிவிக்க வேண்டும். அதன் பிறகு மேற்கொண்டு நடவடிக்கையை சிவசேனா மேற்கொள்ளும். ஆளுநரை சந்தித்த பாஜ தலைவர்கள் ஆட்சி அமைக்க ஏன் உரிமை கோரவில்லை? அவர்கள் ஏன் வெறுங்கையுடன் திரும்பினர்? ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர். மாநிலத்தில் ஆட்சி அமைப்பதை தாமதித்து பாஜ சதி செய்து வருகிறது. எங்கள் எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் வசதி கிடைப்பதை உறுதி செய்ய ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.’’ என்றார்.

‘முதல்வர் பதவி கொடுப்பதாக இருந்தால் பேச வாருங்கள்’

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று உத்தவ் தாக்கரேயின் மாதோ இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களிடையே பேசிய உத்தவ் தாக்கரே, ‘‘மக்களவைத் தேர்தலின்போது அடுத்து அமையும் மகாராஷ்டிரா ஆட்சியில் சமபங்கு என சிவசேனா-பாஜ இடையே உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அதன்படி சிவசேனாவுக்கு முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி ஒதுக்கப்பட வேண்டும். அப்படி முதல்வர் பதவியை ஒதுக்குவதாக இருந்தால் மட்டும் பாஜ தலைவர்கள் என்னை சந்தித்து பேச வரலாம். வேண்டுமானால் பாஜ எத்தனை அமைச்சர் பதவிகளையும் எடுத்துக் கொள்ளட்டும்’’ என்றார்.

Tags : Maharashtra , President's rule , Maharashtra expires today
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...