×

தலைநகர் டெல்லியை மிஞ்சியது சென்னையை அச்சுறுத்தும் காற்று மாசு

* வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணாநகரில் அதிகம்
* குழந்தைகள், நோயாளிகள் மூச்சுத் திணறலால் அவதி

சென்னை: சென்னையில் காற்று மாசு டெல்லியை மிஞ்சியது. வேளச்சேரி, மணலி, கொடுங்கையூர், அண்ணாநகர் உட்பட பல இடங்களில் காற்று மாசு திடீரென அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள், நோயாளிகள் மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு அண்டை மாநிலங்களான அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பிறகு தேவையற்ற வைக்கோலை எரிப்பது வழக்கம். இதுதான் காற்று மாசு திடீரென டெல்லியில் அதிகரிக்க முக்கிய காரணம் என்று தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற வைக்கோல் உள்பட தேவையற்ற விவசாய பொருட்களை எரித்ததாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் வாகனங்கள் பெருக்கம், கட்டுமான பணிகள், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகை போன்ற காரணங்களாலும் டெல்லியில் காற்றின் தரம் மோசடைந்து வருகிறது. இதை தொடர்ந்து காற்று மாசை குறைக்க புதுடெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் புதுடெல்லியில் காசு மாசு குறைந்தபாடில்லை. இதனால், மாநில அரசு பல கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.   பொதுவாக காற்றின் தரத்தை குறிக்கும் தரக்குறியீடு 100க்குள் இருந்தால் மட்டுமே சுவாசிக்க தகுதியானது.

ஆனால், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சில தனியார் அமைப்புகளின் நிகழ் நேர கண்காணிப்பு நிலையங்களில் பதிவானவற்றை வைத்து பார்க்கும் போது சென்னையில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி டெல்லியில் காற்று தரக் குறியீடு 254 ஆக இருந்தது. ஆனால் சென்னையில் அது 264 ஆக அதிகரித்து இருந்தது. இதனால் நோயாளிகள், குழந்தைகள், முதியோர் மூச்சுவிட முடியாமல் திணறினர். குறிப்பாக பொதுமக்களின் தலை மற்றும் முகத்தில் காற்றுமாசுவின் தாக்கத்தால் நுண்துகள்களை காண முடிந்தது. கர்ச்சீப்பால் துடைத்தால் கறை இருப்பதை காண முடிந்தது. இந்த நிலை பிற்பகலில் படிப்படியாக குறைய துவங்கியது. இந்த காற்று தரக்குறியீடு மோசமானதற்கு டெல்லியில் உள்ள காற்று மாசு தான் காரணம் என்று சிலர் கூறினாலும், சென்னையில் உண்டாகும் மாசு உலர்ந்த காற்றாக மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த காற்று மாசு நீர்த்து போகாமலும் வான்வெளியில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தேங்கி இருப்பதாக தெரிகிறது. இதனால், காற்று மாசு கடந்த 3ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்படும் என்பதால் விரைவில் காற்று மாசு நீங்கும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள், நோயாளிகள் வரை மூச்சு விட முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

காற்று மாசு ஏற்பட்டுள்ள நேரங்களில் அதன் பாதிப்பை தடுக்க சில வழிமுறைகளை மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் வரையறுத்துள்ளது. அதன்படி அதிகாலை நேரத்திலும், சூரியன் மறைந்த பிறகும் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது, பகல் நேரங்களில் இருமல், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்தி விட்டு ஓய்வு எடுக்க வேண்டும். வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் ஜன்னல் கதவுகளை அடைத்து வைக்க வேண்டும். அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும் போது தூசு பறக்காதபடி ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னை இருப்போர் மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘காற்று மாசு காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலர்ஜி, ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. மூக்கடைப்பு, மூச்சு வாங்குதல், அடிக்கடி சளி பிடிக்கும் நிலை ஏற்படும். தோல்களில் அரிப்பு ஏற்பட்டு தடுப்புகள் வரும்.

தூசு காரணமாக நுரையீரலில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் இருந்து பாதுகாத்து கொள்ள முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டால் நல்லது. இதனால், மூக்கினுள் துகள்கள் போவது தடுக்கப்படும். தோலில் அரிப்பு ஏற்படுவதை தடுக்க முழுக்கை சட்டை அணிய வேண்டும். வீட்டை விட்டு வெளியில் சென்று வரும் போது கை,கால்களை முதலில் கழுவ வேண்டும். முகத்தில் தூசுபடுவதால் கட்டிகள் வரலாம். எனவே, நல்ல தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்’ என்றார்.

Tags : Delhi ,Chennai , Air pollution, threatens Chennai,capital Delhi
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு