×

திருச்சி அருகே திருவெறும்பூர் வங்கி கொள்ளை சிசிடிவி காட்சி வெளியீடு : துப்பு துலங்காததால் போலீஸ் திணறல்

திருவெறும்பூர்,நவ.8: திருச்சி அருகே திருவெறும்பூர் பெல் கூட்டுறவு வங்கியில் 1.50 கோடி கொள்ளையில் 7நாட்களுக்கு பின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டனர். திருச்சி திருவெறும்பூர் அருகே  பெல்தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக  வைத்திருந்த ஒரு கோடியே 43 லட்சத்து 10 ஆயிரம் கடந்த 31ம்தேதி கொள்ளை  போனது. இச்சம்பவம் குறித்து கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் 6 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை  எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் வங்கியின் கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த காட்சிகளை 7 நாட்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளனர். அதில், சம்பவத்தன்று இரவு 7.58 மணிக்கு ஒருவர் மழைக்கோட்டு, தொப்பி, கை உறை அணிந்து கொண்டு முகம் தெரியாத வண்ணம் வருவது, வங்கியின் ஜன்னல் கதவை திறந்து உள்ளே செல்வது, பின்னர் நிதானமாக நடந்து நேராக ேகஷியர் அறைக்கு சென்று சூட்கேசை எடுக்கிறார்.

மீண்டும் ஜன்னல் அருகே வந்து மறைந்து நிற்கும் ஒருவரிடம் பையை வாங்கி வந்து சூட்கேசை திறந்து பணத்தை அதில் நிதானமாக அடுக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை பார்க்கும்போது பணம் இருந்த இடம் கொள்ளையனுக்கு முன்பே நன்றாக தெரிந்துள்ளது. இதனால்தான் அவர் ஜன்னல் வழியாக இறங்கியதும் நேராக கேஷியர் அறைக்கு சென்று பணத்தை எடுத்துள்ளார். மேலும் இந்த கொள்ளையில் 2க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thiruverumbur ,Bank robbery ,Tiruchi Trichy ,robbery ,Thiruverumbur Bank , Thiruverumbur, Bank robbery ,CCTV footage near Trichy
× RELATED திருவெறும்பூரில் குட்கா வழக்கில்...