×

போக்குவரத்து பணிமனை அமைக்க இடம் வழங்கியவருக்கு 26 ஆண்டாக இழப்பீடு வழங்காததால் ஒரே நாளில் 10 அரசு பஸ்கள் ஜப்தி

வேலூர்: போக்குவரத்து பணிமனை அமைக்க இடம் வழங்கியவருக்கு 26 ஆண்டுகளாக இழப்பீடு வழங்காததால் 30 அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் 10 பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் கஸ்பா ஏ பகுதியை சேர்ந்தவர் கிரிஜாம்மாள்(74). இவருக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. இந்நிலம் கடந்த 1993ம் ஆண்டு ஆம்பூரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்க ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கான இழப்பீடு தொகை குறைவாக கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வேலூர் மாவட்ட நில ஆர்ஜித வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் கிரிஜாம்மாள்  வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 1.75 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகையை வழங்காமல் போக்குவரத்துக்கழகம் காலதாமதம் செய்து வந்தது. இதனால் கிரிஜாம்மாள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விசாரித்த நீதிமன்றம், 30 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில், அப்போது 1 பஸ்சை மட்டும் ஜப்தி செய்தனர். இந்நடவடிக்கையின் போது, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீட்டை விரைந்து தருவதாக தெரிவித்தனர். ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் இழப்பீடு தொகையை அளிக்கவில்லை. இதனால் கிரிஜாம்மாள் மீண்டும் மேல் முறையீடு செய்தார். இதையடுத்து மீதம் உள்ள 29 பஸ்களையும் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோர்ட் ஊழியர்கள் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து நேற்று ஒரே நாளில் அங்கிருந்த 10 பஸ்களை ஜப்தி செய்து, அதற்கான நோட்டீஸை ஒட்டினர். பின்னர், வேலூர் நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றனர். மேலும் 19 பஸ்கள் விரைவில் ஜப்தி செய்யப்படும் என கோர்ட் ஊழியர்கள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 10 பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டதால் அந்த பஸ்களில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் பரிதவித்தனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : government ,landlord , 10 government buses ,single day japtidi
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...